திருநெல்வேலி: தமிழ்நாட்டு மக்களால் கர்ம வீரர், கல்வி கண் திறந்தவர் என அழைக்கப்படும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் 121வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்வை ஒட்டி காமராஜரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிந்து மரியாதை செய்ய ஏற்பாடுகளும் நடந்து வருகிறது.
இந்த நிலையில், நெல்லையைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவி சிவஹரினி என்பவர், காமராஜரின் சாதனையின் மீது ஈர்ப்பு கொண்டு காமராஜரின் 121வது பிறந்த நாளில் அவரது வாழ்கை வரலாற்றை ஓவியமாக வரைந்து அதனை காட்சிப்படுத்த திட்டமிட்டு உள்ளார்.
அதன் படி கடந்த ஓரு வருடமாக கல்லூரி விடுமுறை நாட்களில் சிறு சிறு அளவிலான கதர் துணியில் காமராஜரின் வாழ்கை வரலாற்று ஓவியங்களை வரையத் தொடங்கி இன்று மொத்தமாக 121 அடி நீள துணியில் காமராஜரின் சிறு வயது, இளமைப் பருவம், அரசியல் வாழ்வு, முதலமைச்சர் பணி, காமராஜர் ஆட்சி காலத்தில் அவரால் கல்விக்கு கொண்டு வரப்பட்ட திட்டம், பாசனத்திற்காக கட்டபட்ட அணைகள், பாலங்கள், அகில இந்திய அரசியலில் காமராஜரின் பங்கு போன்றவைகள் ஓவியமாக இடம் பெற செய்து உள்ளார்.
இதையும் படிங்க: காமராஜர் கைகளாலே வரைய வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய் பகுதி நேர ஆசிரியர்!
மேலும், காமராஜரின் இறுதி ஊர்வலத்தின் படமும் அதில் காமரஜரை காண திரண்ட பொதுமக்களின் கூட்டமும் தத்ரூப ஓவியமாக இடம் பெற்றிருந்தது. 121 அடி நீளத்தில் வரைந்து முடிக்கப்பட்ட ஓவியம் நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள வ.உ.சி மைதானத்தில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது.
இதனை பாளையங்கோட்டை பகுதி மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து பார்த்துச் சென்றனர். காமராஜரின் வாழ்க்கை வரலாற்று ஓவியம் தத்துரூபமாக 121 அடி நீளத்தில் கல்லூரி மாணவியின் முயற்சியால் வரைந்து காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது அனைவரின் பாராட்டையும் பெற்று உள்ளது.
மேலும், முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் பிறந்தநாள் ஒவ்வொரு வருடமும் ‘கல்வி வளர்ச்சி நாளாக’ கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அது மட்டுமல்லாமல், காமராஜர் பிறந்தநாளான இன்று அனைத்து பள்ளிகளும் வழக்கம்போல் செயல்படும் என நேற்று தமிழ்நாடு அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Kurichu Dam: பூடானின் குரிஷு அணையில் இருந்து நீர் திறப்பு - அசாம் முதலமைச்சர் எச்சரிக்கை