தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகிய கடனாநதி 43 கிமீ வரை சென்று திருப்புடைமருதூர் அருகே தாமிரபரணியாற்றில் கலக்கிறது. சிவசைலம், பூவன்குறிச்சி, ஆம்பூர், ஆழ்வார்குறிச்சி வழியாக பாயும் அந்த நதியில், தென்மேற்கு வடகிழக்கு பருமழையின் போது அதிகளவில் தண்ணீர் உற்பத்தியாவதால் சிவசைலம் அருகே 1974ஆம் ஆண்டு ரூ. 2.12 கோடி செலவில் கடனா அணைக் கட்டப்பட்டது.
அந்த அணை 1 ஆற்றுமடை, 2 கால்வாய் மடைகளை கொண்டது. அதன் உபரி நீர் வெளியேறுவதற்காக 7 காண்வாய்கள் கட்டப்பட்டுள்ளன. அணையின் பாசனத்திற்கு உட்பட்ட நிலங்களில் பெரும்பகுதி இரு போகங்கள் விளைந்து வந்தன. நீண்ட காலப் பயிர்களும், சோளம், கேழ்வரகு முதலிய குறுங்கால பயிர்களும் பாசன வசதி பெற்றுவந்தன.
குறிப்பாக 6 அணைக்கட்டுகள் மூலமாகவும், கால்வாய்களின் மூலமாகவும் ஆழ்வார்குறிச்சி, மேல ஆம்பூர், பாப்பாகுடி, முக்கூடல், விக்கிரமசிங்கபுரம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாசன வசதி பெற்றுவந்தன. மேலும் 9 ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கு முக்கிய நீராதாரமாக இருந்துவந்தது.
அதுமட்டுமல்லாமல் சுற்றுலா தளமாகவும் திகழ்ந்து வருகிறது. அப்படிப்பட்ட அந்த அணை தற்போது வறண்டு காணப்படுகிறது. 34 அடி நீர் மட்டம் உள்ளது. 20 அடிக்கு மேல் சகதிகள் மண்டிக்கிடக்கின்றன. சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாரப்படாமல் மணல் திட்டுகளாக காட்சியளிக்கிறது.
இது குறித்து அரசபத்து நீர்பாசன சங்க தலைவர் கண்ணன் கூறுகையில், "வழக்கமாக ஜூன் முதல் வாரம் விவசாயத்திற்காக கடனா அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படும். ஆனால் தற்போது அணையின் நீர்மட்டம் குறைவாக உள்ளதால் தண்ணீர் திறக்கப்படவில்லை. அதனால் இந்தாண்டு அணையின் நீர்பாசன பகுதிகளில் விவசாயம் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பல ஆண்டுகளாக முறையான தூர்வாரும் பணிகள் நடைபெறவில்லை. அதனால் அணையை மணல் திட்டுகளும், சகதிகளும் ஆக்கிரமித்துள்ளன. அதனால் அணையின் நீர்ப்பிடிப்பு பாதிக்கப்படுகிறது. மேலும் அரசு சில ஆண்டுகளுக்கு முன்னர் தூர்வாரும் பணி தொடங்கப்பட்டது. ஆனால் அப்போது தொடர்மழைக் காரணமாக பணி நிறுத்தி வைக்கப்பட்டது. எனவே நிறுத்தி வைக்கப்பட்ட தூர்வாரும் பணியினை பருவமழை தொடங்குவதற்கு முன் மேற்கொள்ள வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: புதுச்சேரியில் குறுவை சாகுபடிக்காக காவிரி நீர்த் திறப்பு!