திருநெல்வேலி: தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் வாக்குச் சாவடி முகவர்கள் கூட்டம், நேற்று (நவ.30) திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அதில் அக்கட்சியின் தலைவர் ஜான் பாண்டியன் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து ஜான் பாண்டியன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர், “தென்காசி நாடாளுமன்றத் தொகுதியில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக கட்டாயம் போட்டியிடும். நான் போட்டியிடுகிறேனா? அல்லது எனது கட்சியை சார்ந்த வேற யாரும் போட்டியிடுவார்களா? என்பது குறித்து பொதுக்குழு, செயற்குழு கூடி முடிவெடுப்போம்" என்று கூறினார்.
பின்னர் கூட்டணி குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, “தேர்தலின் போது உள்ள அரசியல் சூழலைப் பொறுத்து, அதிமுகவுடன் கூட்டணியா? பாஜகவுடன் கூட்டணியா? என்பது குறித்து முடிவு எடுக்கப்படும். நாங்கள் பயணிப்பது தேசியமா.. மாநிலமா.. என்பது குறித்தும் அப்போது முடிவு செய்யப்படும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: விஜயகாந்த் விரைவில் பூரண குணமடைய தேமுதிக நிர்வாகிகள் தர்காவில் பிரார்த்தனை!
மேலும், திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், நாகப்பட்டினம், பெரம்பலூர் ஆகிய பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிட முன்னேற்பாடு பணிகள் நடந்து வருவதாகத் தெரிவித்த ஜான் பாண்டியன், தனது கட்சி பாஜகவோடும், அதிமுகவோடு நட்புடன் இருப்பதாக கூறினார்.
பின்னர், நடைபெற்று முடிந்த ஐந்து மாநில தேர்தல்கள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த ஜான் பாண்டியன், "எத்தனை தேர்தல் நடைபெற்றாலும், மத்தியில் எப்போதும் ஆட்சி செய்வது மோடி தலைமையிலான பாஜக அரசு மட்டுமே. அது எப்போதும் மாறாது" எனக் கூறினார்.
அதனைத் தொடர்ந்து இந்தியா கூட்டணி குறித்து கேட்டதற்கு, "தற்போது, இந்தியா கூட்டணி சீர்குலைந்துள்ளது. அவர்களிடம் ஒற்றுமை என்பதே இல்லை. இந்தியா கூட்டணியில் இருப்பவர்கள் பிரதமர் வேட்பாளர் யார் என்பதைக் கூட முடிவு செய்து சொல்ல முடியாத நிலையில் உள்ளார்கள். கூட்டணி தொடங்கியதோடு சரி அது அப்படியே தான் உள்ளது" என விமர்சித்துப் பேசினார்.
மேலும், இந்த நிகழ்ச்சியில், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநில இளைஞரணி தலைவர் வியங்கோ பண்டியன், மாநில மகளிர் அணி செயலாளர் வினோலின் நிவேதா, உட்பட கட்சி நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: துபாயில் நடைபெறும் காலநிலை மாற்றம் மாநாடு… இன்று பிரதமர் மோடி பங்கேற்பு!