கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளிமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இதையடுத்து, கடந்த சில நாள்களாக வடமாநில தொழிலாளர்கள், அவர்களது சொந்த மாநிலத்திற்கு சிறப்பு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம், கூடன்குளத்தில் 2500க்கும் மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் பணியாற்றிவருகின்றனர். இவர்கள் தங்கள் சொந்த ஊருக்குச் செல்ல வேண்டும் என கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து, அவர்களில் நேற்று முதற்கட்டமாக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 1025 பேர், நெல்லையில் இருந்து சிறப்பு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
அவர்களை தொடர்ந்து, இன்று ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 1,240 பேர் சொந்த மாநிலத்திற்கு அனுப்பட்டுள்ளனர். இவர்களுடன் தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றும் ஜார்க்கண்ட் மாநில தொழிலாளர்கள் 122 பேரும் அனுப்பப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் உணவு , தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன.
இதையும் படிங்க: 'இங்கு அன்பும் அளிக்கப்படும்' - இப்படிக்கு நெல்லை தற்காலிக முகாம்!