திருநெல்வேலி: நெல்லை மாவட்டத்தில் கடந்த 16, 17 தேதிகளில் மிக கனமழை பெய்ததால் தாமிரபரணி ஆற்றில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டது. இதன் காரணமாக நெல்லை மாவட்டமே பெரும் சேதத்தை சந்தித்தது. இதனைத் தொடர்ந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர்.
அணைகளில் தண்ணீர் திறப்பும் குறைக்கப்பட்டது. இந்நிலையில் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக நெல்லை மாவட்டத்தில் சில இடங்களில் மீண்டும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
அதன்படி நெல்லை மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்று முன்தினம் (டிச.28) முதல் மிதமான மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளான பாபநாசம், களக்காடு, மாஞ்சோலை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
இதனால் பாபநாசம், மணிமுத்தாறு ஆகிய அணைகளுக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்த நிலையில் தாமிரபரணி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீர் அளவு வினாடிக்கு 1,100 கன அடியில் இருந்து சுமார் 5,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.
தொடர்ந்து மலைப்பகுதியில் மழை நீடித்து வருவதால் அணைகளில் நீர்வரத்து மேலும் அதிகரித்ததுள்ளது. மாவட்டத்தில் அதிகபட்சமாக மாஞ்சோலை எஸ்டேட் பகுதிகளான ஊத்து பகுதியில் 22 செ.மீ மழையும், நாலுமுக்குவில் 21 செ.மீ மழையும், காக்காச்சியில் 20 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.
எனவே மணிமுத்தாறு, பாபநாசம் போன்ற அணைகளில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு நேற்று (டிச.29) மாலை சுமார் 9,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. குறிப்பாக மணிமுத்தாறு அணையில் இருந்து மட்டும் சுமார் 5 ஆயிரம் கனயடியாக தண்ணீர் தாமிரபரணத்தில் திறந்து விடப்படுகிறது.
இதை தவிர தென்காசி மாவட்டம் கடனாநதி அணையில் இருந்து வரும் நீர் மற்றும் காட்டாற்று வெள்ளம் சேர்த்து சுமார் 10,000 கன அடி தண்ணீர் செல்வதால் ஏழு நாட்களுக்கு பிறகு தாமிரபரணி ஆற்றில் மீண்டும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
மேலும், நெல்லை மாநகர பகுதியான கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றில் இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் செல்கிறது. அதேசமயம் ஆபத்தை உணராமல் பொதுமக்கள் தாமிரபரணி ஆற்றில் கரையோரமாக குளிப்பதும், துணி துவைப்பதும் போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்: மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.. அப்படியென்ன என்ன ஸ்பெஷல்..?