திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து அருகே உள்ள குறிச்சிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் சொரிமுத்து (37). இவர் கேரளாவில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வடை போட்டு விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன் கேரளாவைச் சேர்ந்த ரம்லத் (30) என்ற பெண்ணைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்திற்குப் பிறகு, மனைவியை சொந்த ஊரான குறிச்சிகுளத்திற்கு தனது வீட்டிற்கு அழைத்து வந்து விட்டார். சொரிமுத்து மட்டும் கேரளாவில் தங்கி தொழில் செய்துவந்தார். விடுமுறை நாள்களில் சொந்த ஊருக்கு வந்து செல்வார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் தற்போது கரோனா தொற்று ஊரடங்கால் கேரளாவில் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதால், சொரிமுத்து கடந்த ஒரு மாதமாக சொந்த ஊரான குறிச்சிகுளத்தில் குடும்பத்தினருடன் உள்ளார். அப்போது,ரம்லத்தின் நடத்தை சரியில்லை என்று அவரது நண்பர்கள், ஊரில் உள்ள சிலர் சொரிமுத்துவிடம் தெரிவித்துள்ளனர்.
ஒருவருடன் திருமணத்தைத் தாண்டிய பந்தத்தில் இருப்பதாகவும் கூறியுள்ளனர். இதனையடுத்து கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை மனைவியை தனது இருசக்கர வாகனத்தில் வெளியில் அழைத்துச் சென்று, தாழையூத்து அருகே நான்கு வழிச்சாலை பகுதியில் அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு, தாழையூத்து காவல் நிலையத்தில் சொரிமுத்து சரணடைந்துவிட்டார்.
இதனையடுத்து காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்ணின் உடலை மீட்டு, பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனர். மேலும் இது குறித்து தாழையூத்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: மனைவியை கட்டையால் அடித்து கொன்ற கணவன்!