உலகம் முழுவதும் கரோனா வைரஸ் தொற்றால் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள அடையகருங்குளத்தைச் சேர்ந்த தொழிலாளியான முருகன், கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு கேரளாவிற்கு வேலைக்குச் சென்றுள்ளார். நேற்று வீடு திரும்பிய அவருக்கு கரோனா வைரஸ் அறிகுறி ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர் நெல்லை அரசு மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் 108 ஆம்புலன்ஸில் வந்த மருத்துவமனை ஊழியர்கள் அவரையும், சந்தேகத்தின் அடிப்படையில் அவரது மனைவியையும் பாதுகாப்பாக அழைத்துக் கொண்டு அரசு மருத்துவமனை சிறப்பு வார்டில் அனுமதித்தனர்.
தற்போது இருவருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே நெல்லை அரசு மருத்துவமனையில் இரண்டு பேர் கரோனா வைரஸ் அறிகுறியுடன் வந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நெல்லையில் கொரோனா மையம்: அமைச்சர் விஜய பாஸ்கர் அறிவிப்பு