நெல்லை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையின் தாக்கம் பெரிதும் இல்லாத நிலையில் வெயிலின் தாக்கம் மிதமாக இருந்துவந்தது. ஆனால் கடந்த இரண்டு வாரமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து கடும் வெப்பம் நிலவியது. காலை ஏழு மணிக்கே வெயில் உக்கிரம் காட்டத் தொடங்கியது. இதனால் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள், வேலைக்குச் செல்லும் பொதுமக்கள் என அனைவரும் வெப்பத்தால் கடும் அவதிக்கு உள்ளாகிவந்தனர். இந்நிலையில் நேற்று காலை முதல் வானிலையில் மாற்றம் ஏற்பட்டு வானம் மேகமூட்டமாக காணப்பட்டது.
பின்னர் மாலையில் இடி மின்னலுடன் கன மழை பெய்யத் தொடங்கியது, நெல்லை மாநகர் பகுதியில் நெல்லை சந்திப்பு, தச்சநல்லூர், டவுன், பாளையங்கோட்டை, கே.டி.சி நகர் ஆகிய பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது.
இந்த மழையால் சாலைகள், தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. ஆனால் காலையில் வழக்கம்போல வெப்பம் வாட்டி வந்த நிலையில், மாலை பலத்த மழை பெய்தது. நீண்ட நாட்கள் வெயிலால் அவதிப்பட்ட பொதுமக்கள் இரு நாட்கள் பெய்த மழையால் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.