திருநெல்வேலி: ராதாபுரம் திருச்செந்தூரைச் சேர்ந்த ஸ்டாலின் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அதில், "தோமையார்புரம் கிராமத்தில், கடற்கரை அருகே மீன் வலைகளை சரிசெய்வது அவற்றை உலர வைப்பதற்காக அரசுத்தரப்பில் நிழற்கூடம் ஒன்று கட்டிக் கொடுக்கப்பட்டது.
இந்நிலையில், மீனவ கிராமத்திற்கு என்று கடற்கரையில் தமிழ்நாடு அரசால் கட்டிக் கொடுக்கப்பட்ட வலைபின்னும் கூடத்தை அற்புதராஜ் என்பவர் ஆக்கிரமித்து, இறால் வளர்ப்பு பண்ணையாக மாற்றி தொழில் செய்து வருகிறார். இதற்கு தேவையான கடல் தண்ணீரை கடலிலிருந்து மின் மோட்டார் மூலமாக பைப் அமைத்து எடுக்கிறார்.
மின்சார இணைப்புகள் கடற்கரையில் பாதுகாப்பின்றி கிடக்கின்றன. அதோடு இதற்கென எவ்விதமான அனுமதியும் அவர் பெறவில்லை. இது தொடர்பாக நடவடிக்கை கோரி அலுவலர்களிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே, மீனவர்களுக்கான வலை பின்னும் கூடத்தில் இறால் வளர்ப்பிற்காக போடப்பட்டுள்ள அமைப்புகளை அகற்றவும், அங்கு இறால் பண்ணை நடத்த தடை விதித்தும் உத்தரவிட வேண்டும்" எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தாசில்தார் சம்மந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்து, அங்கு சட்டவிரோதமாக இறால் பண்ணை நடத்தப்பட்டால் அந்த இடத்திற்கு சீல் வைக்கவும், இறால் பண்ணை நடத்தியவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து அறிக்கையை 3 வாரத்திற்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: கூட்டம் கூடும் மக்கள்: திநகர், புரசைவாக்கம் பகுதியில் அலுவலர்கள் ஆய்வு