நெல்லை டவுன் சாஃப்டர் அரசு உதவிபெறும் பள்ளியில் கழிவறைக் கட்டடம் இடிந்து விழுந்து மூன்று மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இன்று (டிசம்பர் 23) நெல்லை வந்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளி விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று பெற்றோர்களிடம் ஆறுதல் கூறினார்.
அதைத் தொடர்ந்து வண்ணாரப்பேட்டையில் தரமற்ற முறையில் காணப்படும் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி கட்டடம் இடிக்கப்படுவதை ஆய்வுசெய்தார். பின்னர் பாளையங்கோட்டையில் உள்ள நெல்லை மாவட்ட மைய நூலகத்தில் ஆய்வுசெய்தார்.
தொடர்ந்து பள்ளி விபத்தில் படுகாயமடைந்து நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் மூன்று மாணவர்களை அவர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
மேலும் நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளிக் கல்வித் துறை அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் அன்பில் மகேஷ் கலந்துகொண்டார்.
கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளரிடம் பேசிய அவர், "நெல்லை மாவட்டத்தில் மட்டும் தரமற்ற முறையில் உள்ள 168 கட்டடங்கள் இடித்து கட்டப்படுகின்றன. கடந்த ஆகஸ்ட் முதல் ஐந்து மாதங்களாகவே இந்த ஆய்வு நடைபெற்றுதான் வருகிறது. இருப்பினும் இச்சம்பவம் துரதிர்ஷ்டவசமாக நடைபெற்றுவிட்டது.
பள்ளிகளை இடிக்கும்போது மாணவர்களை அருகில் உள்ள பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுத்துவருகிறோம். அதிக மாணவர்கள் படிக்கும் பள்ளியில் இடைவேளை நேரத்தை மாற்றி அமைப்பது குறித்து உரிய ஆய்வுக்குப் பிறகு நடவடிக்கை எடுக்கப்படும். டிசம்பர் 25 முதல் ஜனவரி 2ஆம் தேதிவரை பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை விடப்படும்" என்றார்.
இதையும் படிங்க: கருணாநிதியின் நெருங்கிய நண்பர் கவுண்டம்பட்டி முத்து காலமானார்