திருநெல்வேலி: மாவட்டம் முனைஞ்சிப்பட்டி அருகேயுள்ள காரியாண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் 80 வயதான துரைப்பாண்டி தாத்தா. இவரது மனைவி வேலம்மாள். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். துரைப்பாண்டி தாத்தா தனது 12 வயதில் பனை மரம் ஏற கற்றுள்ளார். பின்னர் இளம் வயதில் அதையே முழு நேர தொழிலாகவும் வைத்துள்ளார்.
திருமணமான நிலையில், குடும்பத்துடன் மும்பையில் குடியேறியுள்ளார். அங்கும் பனை மரம் ஏறும் வேலையை பார்த்து வந்துள்ளார். தனது குழந்தைகளின் திருமண வாழ்க்கைக்கு பின்னர் சொந்த ஊரான காரியாண்டியில் குடியேறி விட்டார், துரைப்பாண்டி. தற்போது 80 வயதை கடந்த துரைப்பாண்டி தாத்தாவை அவரது மகன் கவனிப்பதில்லை.
முதுமை துரத்தவே கடைசி காலத்தில் மகனின் அரவணைப்பில் இளைப்பாறலாம் என்ற நினைத்த துரைப்பாண்டி தாத்தாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இருந்தாலும் தனது ஆசை மனைவி வேலம்மாளை பட்டினி போட மனமில்லாத துரைப்பாண்டி தாத்தா, மீண்டும் பணை ஏறும் தொழிலில் களமிறங்கியுள்ளார்.
உழைப்புக்கு வயது தடை இல்லை என்பதை நன்கு உணர்ந்த துரைப்பாண்டி தாத்தா தற்போது வரை யாரிடமும் கையேந்தாமல் பணை ஏறி பதநீர் எடுத்தும், நொங்கு வெட்டியும் தனது பொருளாதார தேவையை நிவர்த்தி செய்து வருகிறார். இதற்காக தினமும் அதிகாலை நேரத்தில் எழுந்து பனை ஏறச் செல்கிறார்.
இளம் வயதில் நாள் ஒன்றுக்கு 30 மரம் ஏறும் அளவுக்கு உடல் ஒத்துழைத்துள்ளது. ஆனால் தற்போது பத்துக்கும் குறைவான மரங்களில் மட்டுமே ஏறி, மிகச்சிறிய வருமானத்தை கொண்டு மனைவியுடன் ஆனந்தமாக வாழ்ந்து வருகிறார், துரைப்பாண்டி தாத்தா. வயது மூப்பு காரணமாக உள்ள கூண் உடலோடு பனை ஏறி வரும் துரைப்பாண்டி தாத்தா கூறுகையில், “12 வயதில் பனை ஏற கற்றுக்கொண்டேன். என் தாத்தா தான் எனக்கு பனை மரம் ஏறுவதற்கு கற்றுக்கொடுத்தார்.
மும்பையில் பத்து வருடங்கள் மரம் ஏறினேன். என் மகன் மதுவுக்கு அடிமையாகி விட்டான். செலவுக்கு பணமும் தரமாட்டான். வீட்டில் ரொம்ப கஷ்டம். எனவே எனக்கு தெரிந்த தொழிலை செய்து பிழைப்பை நடத்துகிறேன். எனக்கு முதியோர் பென்சன் கிடைக்கிறது. என் பொண்டாட்டிக்கும் பென்சன் கொடுத்தார்கள் என்றால், அதை வைத்து மீதி காலத்தை ஓட்டி விடுவோம்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பூந்தமல்லி அருகே பப்ஜி விளையாட்டு தகராறில் ஒருவருக்கு கத்திக்குத்து; 4 பேர் கைது