திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் பகுதியில் நேற்று(அக்-9) மாலை இடி மின்னலுடன் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. வள்ளியூரில் இருந்து திருச்செந்தூர் செல்லக்கூடிய பிரதான சாலையில் ரயில்வே பாதையை கடப்பதற்காக சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் மழை பெய்யும்போது இந்தப் பகுதியில் தண்ணீர் தேங்குவது வழக்கம்.
அதனை அப்புறப்படுத்தத் தேவையான நடவடிக்கைகள் உடனடியாக எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து எழுப்பப்பட்டு வந்த நிலையில், நேற்று பெய்த கனமழை காரணமாக வழக்கம் போல் சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கியது. நாகர்கோவிலில் இருந்து விஜயநாராயணம் செல்லும் அரசுப்பேருந்து இந்த சுரங்கப்பாதையினைக் கடக்க முயன்ற நிலையில் தண்ணீருக்கு நடுப்பகுதியில் சிக்கியது.
பேருந்தை அப்பகுதியில் இருந்து நகற்ற முயன்ற முயற்சி தோல்வியில் முடிந்தது. இதனை அடுத்து வேறு வழியின்றி மூன்று அடிக்குமேல் தேங்கியுள்ள தண்ணீரில் இறங்கி பயணிகள் அப்பகுதியைக் கடந்து மாற்றுப்பேருந்தில் தங்கள் பகுதிகளுக்கு பயணித்தனர். அதோடு அந்தப் பகுதியில் போக்குவரத்து மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டது. தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்வதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர்.
இதையும் படிங்க:ஓடும் பேருந்தில் மாஸ்க் அணியும்படி பேச்சுக்கொடுத்து மூதாட்டியிடம் 11 பவுன் தங்க நகை திருட்டு