நெல்லை பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கான விடுதி வண்ணாரப்பேட்டை பகுதியில் அமைந்துள்ளது. இந்த விடுதி கட்டடம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆன நிலையில் சேதமடைந்து காணப்படுகிறது. இதனை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டித் தரப்படும் என்று ஆறு ஆண்டுகளுக்கு முன் கல்லூரி நிர்வாகம் சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்ட நிலையில், ஆனால் இன்றுவரை எந்தப் பணிகளும் நடைபெறவில்லை.
இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் இந்தக் கல்லூரியில் மாணவர்களுக்கு விடுதி வசதி உள்ளதாகக் கூறி மாணவர்கள் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் விடுதி வசதி இல்லாததால் மாணவர்கள் வெளியில் தங்கி பயின்று வருகின்றனர்.
மாணவர்கள் வெளியில் தங்கி பயில்வதால் அதிக அளவில் செலவு ஏற்படுவதால் உடனடியாக புதிய கட்டடம் கட்டித் தரக்கோரியும், அதுவரை தற்காலிக விடுதி அமைத்து தர வலியுறுத்தியும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கள் பொருட்கள், துணிகளுடன் கல்லூரி வளாகத்தில் குடியேறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் சார்பில் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது புதிய விடுதி கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதுவரை தற்காலிக விடுதிக்கு ஏற்பாடு செய்யுமாறு மாணவர்கள் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கைக்கு கல்லூரி நிர்வாகம் முறையான பதில் அளிக்காததால் மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கரோனா அறிகுறி: சிறப்பு மருத்துவ முகாம் கொண்டுசெல்லப்பட்ட பயணிகள்!