நெல்லை: பணங்குடி அருகே உள்ள பொதுமக்கள் அப்பகுதியில் உள்ள குளத்தில் குளிப்பது வழக்கம். இந்நிலையில் வழக்கம்போல் பொதுமக்கள் சிலர் அக்குளத்தில் குளித்துக் கொண்டிருக்கும்போது காலில் ஏதோ தட்டுப்பட்டுள்ளது, அது என்ன என்று எடுத்துப் பார்த்தபோது ஒரு அடி உயரம் கொண்ட சிவன் வெள்ளி சிலை எனத் தெரியவந்தது.
உடனே பொதுமக்கள், பணங்குடி காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர். தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற காவல் துறையினர், வெள்ளி சிலையை மீட்டு பணங்குடி வருவாய் ஆய்வாளரிடம் ஒப்படைத்தனர். இந்தச் சிலையானது ஒரு அடி உயரமும் 20 கிலோ வெள்ளியினால் செய்யப்பட்ட சுவாமி சிலை என்பதும் தெரியவந்தது.
திருடப்பட்ட சிலையா?
சிலை தற்போது ராதாபுரம் கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. பணங்குடி வடக்கன்குளம், விளாத்திகுளம் சமூக ரெங்கபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக சாலையின் கரையோரங்களில் இருக்கும் கோயில்களில் சிலைகள், உண்டியல்கள் உடைக்கப்பட்டு திருடப்பட்டுவருவது வாடிக்கையாக இருந்துவருகிறது.
எனவே அதுபோன்று திருடுபோன சிலையாக இருக்கலாம் எனக் காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர். ஏற்கனவே கடந்த 31ஆம் தேதி நாங்குநேரி பேருந்து நிலையத்தில் உள்ள கழிவறையில் நான்கு ஐம்பொன் சிலைகள் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதனடிப்படையில் இச்சிலை திருடப்பட்டு குளத்தில் வீசப்பட்டதா? எனச் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க:'நீட் விலக்கு சட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது ஏற்கத்தக்கது அல்ல!'