தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் திருநெல்வேலியில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, "தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் முறையாக நேர்மையாக நடைபெறும் என்று நம்புகிறேன். மத்திய அரசும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கின்றது.
தமிழ்நாட்டு எதிர்கட்சி சட்டப்பேரவையில் இல்லாமல் வெளியே இருந்து வளர்ச்சியைத் தடுக்க நினைக்கின்றனர். அவர்களுக்கு மக்கள் இந்தத் தேர்தலில் தகுந்த பாடம் புகட்டுவார்கள். நாங்கள் தேர்தல் பணியை ஜனவரி மாதம் முதலே தொடங்கிவிட்டோம். மாநில அரசு தொடர்ந்து மக்களுக்கு கொடுக்கும் திட்டம் எதிர்வரும் தேர்தலுக்கு அடித்தளமாக அமையும்.
பெண்களின் பாதுகாப்பு, வளர்ச்சிக்காக மாநில அரசு, மகளிர் சுய உதவிக் குழுக்களின் கடன்களை தள்ளுபடி செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. பள்ளி மாணவர்களின் மீதான அக்கறை, விவசாயிகளின் கடன் தள்ளுபடி என, மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
விரைவில் அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தைத் தொடங்கும். மக்களுக்கு கொடுத்த திட்டம், வளர்ச்சியின் அடிப்படையில் வெற்றி கிடைக்கும். அகில இந்தியளவில் கண்மூடித்தனமாகப் பாஜகவை எதிர்ப்பதை காங்கிரஸ் செய்து வருகின்றது. புதுச்சேரியில் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் தோல்வியடைந்துள்ளது. ஆனால் மக்கள் வெற்றி பெற்றுள்ளார்கள்" என்றார்.
இதையும் படிங்க: சபாநாயகர் முறையாக தீர்ப்பு வழங்குவார்: ஜி.கே.வாசன்