முன்னதாக செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், "இந்தத் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும். திமுக அருதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். மத்திய, மாநில அரசுகள் மக்களுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றன. தொழிலாளர்களின் உரிமையைப் பறிக்கும் சட்டத் திருத்தங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதை அதிமுக அரசும் ஆதரித்துள்ளது.
வேளாண் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டால் விவசாயம் முழுக்க முழுக்க கார்ப்பரேட் நிறுவனங்களிடம் சென்று விடும். ’விவசாயி மகன்’ என்று சொல்லும் முதலமைச்சர், வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராடும்போது எந்தப் பக்கம் நின்றார்? 2020ஆம் ஆண்டு, மார்ச் மாதத்திற்குப் பிறகு பெட்ரோல் விலை ஏறிக் கொண்டே செல்கிறது. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை 50 டாலர் குறைந்துள்ளது. எனவே பெட்ரோல் விலையும் குறைந்திருக்க வேண்டும். கல்விக் கொள்கையிலும் பல்வேறு பாதகங்களைக் கொண்டு வந்துள்ளனர்.
அரசுப் பள்ளிகள் மூடப்பட்டால் ஏழைக் குழந்தைகளின் கல்வி பாதிக்கும். நீட் தொடர்பான உள் ஒதுக்கீட்டை ஏற்றுக் கொள்ளவில்லை என்று மத்திய அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 60 விழுக்காடு வேலைவாய்ப்பு தரும் சிறு, குறு தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டியால் தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு ஐந்து லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர். ஒரு பெண் ஐபிஎஸ் அலுவலர் பாலியல் கொடுமைக்கு ஆளாகியுள்ளார் பெண்களைக் காப்பாற்ற ’காவலன் செயலி’ இருப்பதாக முதலமைச்சர் கூறுகிறார். அப்படி என்றால், அந்த பெண் ஐபிஎஸ் அலுவலர் எந்த காவலன் செயலியைப் பயன்படுத்தினார்? ஆகமொத்தம் தமிழ்நாட்டில் நடைபெறுவது ஜனநாயகமா, சர்வாதிகாரமா எனத் தெரியவில்லை" என்றார்.