தமிழ்நாட்டில் காவலர்களுக்கு உதவியாக இருக்க உருவாக்கப்பட்ட அமைப்பு ’ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்’. ஆனால், இந்த அமைப்பு தற்போது தமிழ்நாடு முழுவதும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. காவலர்களைப் போன்று அதிகாரத்தை பயன்படுத்தி இந்த அமைப்பினர் லஞ்சம், கொள்ளை உள்ளிட்டவற்றில் ஈடுபடுவதாகவும், மக்களிடம் தரக்குறைவாக நடந்து கொள்வதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
முன்னதாக, சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பைச் சேர்ந்த இளைஞர்களுக்கும் தொடர்பிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், தற்காலிகமாக ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்புக்கு தடை விதிப்பதாக தமிழ்நாடு டிஜிபி ஜே.கே.திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், ஃபிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்புக்கு நிரந்தரமாகத் தடை விதிக்க வேண்டும் என்று திருநெல்வேலி மாவட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் இன்று திருநெல்வேலி ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில், "தமிழ்நாட்டில் கரோனா காலம் காவல் துறையினரின் அராஜக சாம்ராஜ்யமாக மாறி வருகிறது. தங்களுக்குக் கொடுக்கப்பட்ட அதிகாரத்தை இவர்கள் முறைகேடாகப் பயன்படுத்தக் கூடிய விதத்தை அன்றாடம் பார்க்கிறோம். தமிழ்நாடு முழுவதும் காவல் துறை நண்பர்கள் என்ற பெயரில் ஒரு குழுவினரோடு இவர்கள் இணைந்து, தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர்.
இவர்கள், காவல் துறையினருக்கு தொண்டு செய்வது, அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி பிறரை சித்திரவதை செய்வது, கடைகாரர்களை மிரட்டி காசு பறிப்பது போன்ற தரமற்ற செயலில் ஈடுபட்டு வருகின்றனர். சாத்தான் குளம் சம்பவத்தில்கூட காவல் துறையின் நண்பர்கள் குழுவுக்கு பங்கு உள்ளதாகத் தகவல்கள் வெளி வருகின்றன. இது குறித்து உரிய விசாரணை செய்ய வேண்டிய பொறுப்பு தமிழ்நாடு அரசுக்கு உள்ளது.
தற்காலிகமாக இந்த அமைப்பைப் பயன்படுத்த தடை வழங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது ஒரு கண் துடைப்பு நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது. எனவே ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பை நிரந்தரமாகத் தடை செய்ய வேண்டும்" என வலியுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: சென்னையில் கரோனாவால் மேலும் 28 பேர் உயிரிழப்பு!