திருநெல்வேலி: நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றாமல், உள்ளாட்சித்தேர்தல் நடப்பதாக குற்றஞ்சாட்டி, முன்னாள் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் இன்பதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்க வந்தார்.
அவரை காவல் துறையினர் உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தினர். இதனால் இன்பதுரை காவலர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நெல்லை உள்ளாட்சித்தேர்தலில் நீதிமன்ற உத்தரவை சரியாகப் பின்பற்றவில்லை. வாக்குப்பதிவை நேரலை செய்ய வேண்டும்.
கூடுதல் பார்வையாளர்கள் நியமிக்கப்படவில்லை. அலுவலர்கள் வெறும் அறிக்கை மட்டுமே விடுகின்றனர். மாவட்ட ஆட்சியர் திமுக அரசின் பிடியில் இருக்கிறார். அதனால் தான் என்னை உள்ளே விடவில்லை.
நீதிமன்ற உத்தரவை சரியாகப் பின்பற்றவில்லை
முன்னாள் எம்எல்ஏ எனக்கே இந்த கதி. சபாநாயகர் அப்பாவு கட்சி சார்பற்றவர் ஆவார். ஆனால், அவர் படத்தைப் பயன்படுத்தி பரப்புரை செய்தனர். இது அதிகார துஷ்பிரயோகம்.
தேர்தல் ஆணையம் இருக்கிறதா? என்னை உள்ளே விடாமல் தடுப்பதே நீதிமன்ற அவமதிப்பு ஆகும். இதுதொடர்பாக ஆளுநரிடம் நானே நேரில் சென்று புகார் அளிப்பேன். தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று சொல்லவில்லை.
தவறுகளை நீக்க வேண்டும் என்பது தான் எனது கோரிக்கை" என்றார்.
இதையும் படிங்க: ஜனநாயகக் கடமையாற்றிய முன்னாள் அமைச்சர்!