திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை, தெற்கு பஜாரில் ஸ்ரீராம் லாலா கடை இயங்கி வருகிறது. இந்தக் கடையில் வாடிக்கையாளர் ஒருவர் பக்கோடா வாங்கியுள்ளார். அவர் வாங்கிய பக்கோடாவில் பல்லி இறந்து கிடந்ததாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து அந்தக் கடையின் பெயருடன், பாக்கெட்டில் பக்கோடாவுடன் பல்லி பொறியலும் சேர்த்து வழங்கப்படுவதாக புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானது.
இந்தத் தகவலையடுத்து மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சசி தீபா உணவு பாதுகாப்பு அலுவலர் சங்கரலிங்கம் ஆகியோர் தலைமையிலான குழுவினர் ஸ்ரீராம் லாலா கடையில் சோதனை மேற்கொண்டனர். இந்தச் சோதனையில், கடையில் வைக்கப்பட்டிருந்த இனிப்பு பலகாரங்களை மூடாமல் திறந்த வெளியில் வைத்தபடி விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.
மேலும் பலகாரங்கள் செய்யும் சமையற்கூடம் சுகாதாரம் இல்லாமல் இருப்பதும் சோதனையில் தெரியவந்தது. பின்னர் சுகாதாரமற்ற முறையில் விற்கப்பட்ட இனிப்பு வகைகளை கீழே கொட்டிய அலுவலர்கள், ஜாங்கிரி உள்ளிட்ட பலகார வகைகளை ஆய்வுக்கு எடுத்துச் சென்றனர்.
மேலும் 24 மணி நேரத்தில் கடையை சுத்தப்படுத்துவதுடன் பலகாரங்கள் வைக்கப்படும் இடங்களையும் கண்ணாடி கொண்டு மூடி பாதுகாப்பு ஏற்படுத்தும்படி அலுவலர்கள் கடை உரிமையாளருக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
அதுவரை கடையில் பலகாரங்களை விற்பனை செய்யக்கூடாது எனவும், 24 மணி நேரத்திற்குப் பிறகு மறு ஆய்வு நடத்திய பிறகே கடையில் மீண்டும் விற்பனையைத் தொடங்க வேண்டும் என்றும் அலுவலர்கள் தெரிவித்தனர்.
அதே சமயம் பக்கோடாவில் பல்லி இறந்து கிடந்தது தொடர்பாக அலுவலர்கள் எந்த ஒரு விசாரணையும் மேற்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், சுகாதாரமற்ற முறையில் கடை இருப்பது தெரிந்தும் அலுவலர்கள் குறைந்தபட்சமாக அபராதம் கூட விதிக்காமல் இருப்பது சமூக ஆர்வலர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சசி தீபா கூறுகையில், ”தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் இனிப்பு, பலகாரக் கடைகளில் சுகாதாரமான முறையில் உணவுப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவது குறித்து தொடர் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். சுகாதாரமற்ற உணவுகள் விற்கப்படுவது தெரிந்தால் சம்மந்தப்பட்ட கடை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.