திருநெல்வேலி: அரபிக்கடலில் உருவான வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக டிசம்பர் 17, 18 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் அதி கனமழை பெய்தது. இந்த அதி கனமழையால் தாமிரபரணி ஆறு, கோதையாறு, குழித்துறை ஆறு உள்ளிட்ட ஆறுகளில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து பல்வேறு மீட்பு பணிகள் நிறைவடைந்த நிலையில், பாதிப்பு ஏற்பட்ட மாவட்டங்கள் இயல்பு நிலைக்குத் திரும்பி வருகின்றன. இதனிடையே வெள்ள சேதங்களைப் பார்வையிடத் திருநெல்வேலி வந்த முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அதிக பாதிப்புள்ள இடங்களுக்கு 6 ஆயிரம் ரூபாயும், குறைந்த பாதிப்புள்ள பகுதிகளுக்கு ஆயிரம் ரூபாயும் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்தார்.
இதனை அடுத்து இந்த மழையால் பெரும் பாதிப்பைச் சந்தித்த தாமிரபரணி நதிக்கரை வட்டங்களான அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, பாளையங்கோட்டை ஆகிய பகுதிகளில் வசிக்கும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், அதிக பாதிப்படைந்த கடற்கரை கிராமங்கள் மற்றும் அருகாமை பகுதிகளான ராதாபுரம் வட்டம், லெவிஞ்சிபுரம், செட்டிகுளம், கூடங்குளம், விஜயாபதி மற்றும்
திருவம்பலாபுரம் ஆகிய 5 வருவாய் கிராமங்கள், திசையன்விளை வட்டம், அப்புவிளை, உறுமன்குளம், கரைசுத்து புதூர், கரைசுத்து உவரி மற்றும் குட்டம் ஆகிய 6 வருவாய் கிராமங்கள் ஆகியவற்றில் வசிக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணத்தொகையாக தலா 6 ஆயிரம் ரூபாய் வீதமும் மாவட்டத்தில் உள்ள ஏனைய கிராமங்களில் வசிக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணத் தொகையாக தலா ஆயிரம் ரூபாய் வீதமும் வழங்கப்படும் என அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
இதனை அடுத்து இன்று (டிச.29) காலை முதல் நிவாரணத்தொகை வழங்கும் பணி தொடங்கி நடைபெற்றது. மாவட்டத்தில் உள்ள 796 ரேசன் கடைகள் மூலம் 5 லட்சத்து 4 ஆயிரத்து 357 குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரண தொகை வழங்கப்படுகிறது. இதில் குறிப்பாக 3 லட்சத்து 40 ஆயிரத்து 552 அட்டைதாரர்களுக்கு 6 ஆயிரம் ரூபாயும், 1 லட்சத்து 63 ஆயிரத்து 705 பேருக்கு 1000 ரூபாயும் வழங்கப்படுகிறது. இதற்கென திருநெல்வேலி மாவட்டத்திற்கு அரசால் 220.76 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
இன்று காலை முதல் நிவரணத்தொகை வழங்கும் பணி தொடங்கியுள்ள நிலையில், பிற்பகல் வரை 16.69% சதவீதம் பேருக்கு நிவாரண தொகை வழங்கப்பட்டிருப்பதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது மொத்தமுள்ள 5 இலட்சத்து 4 ஆயிரத்து 357 பேரில், 84 ஆயிரத்து 170 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தான்தோன்றித்தனமாக செயல்படுகிறார் - திருமாவளவன் கடும் தாக்கு!