திருநெல்வேலி: ராமையன்பட்டியில் மாநகராட்சிக்கு சொந்தமாக சுமார் 150 ஏக்கரில் குப்பை கிடங்கு, கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலை அமைந்துள்ளது. இங்கு தினசரி 110 டன் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன.
இதேபோல் மாநகராட்சியின் பல்வேறு இடங்களில் சுமார் 44 நுண் குப்பை கிடங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இராமையன்பட்டி குப்பை கிடங்கில் நேற்று (ஜூலை 27) இரவு 10 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.
காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ மளமளவென குப்பைக்கிடங்கு முழுவதும் பரவியது. இதனால் வெளிவரும் புகை மூட்டததால், அப்பகுதி முழுவதும் புகை மண்டலாக காட்சி அளிக்கிறது. இதனையடுத்து அங்கு சென்ற பாளையங்கோட்டை, பேட்டை தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைத்து வருகின்றனர்.
ஆண்டுதோறும் ஜூன், ஜூலை மாதங்களில் தீ பற்றி எரிவதாகவும், இதனால் பொது மக்கள் பாதிக்கப்படுவதாகவும் சுற்றுவட்டார மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். குடியிருப்பு பகுதிகளில் குப்பைகளை கொட்டுவதை நிறுத்தினால் தான் இதற்கு தீர்வு ஏற்படும் எனவும் அவர்கள் கூறினர். காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் தீயை அணைக்கும் பணி சவாலாக உள்ளது.
இதையும் படிங்க: வெளிநாட்டில் மேற்படிப்பு - சீட் வாங்கித்தருவதாக ரூ.38 லட்சம் மோசடி