தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலை மிக தீவிரமாகப் பரவி வருகிறது. நாள்தோறும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்த வகையில், திருநெல்வேலி மாவட்டத்திலும் கரோனா தொற்று தீவிரமாகப் பரவிவருகிறது.
இதனால், பாளையங்கோட்டை அரசு தலைமை மருத்துவமனை, சித்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகிய இடங்களில் அரசு சார்பில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தவிர மாவட்டம் முழுவதும் உள்ள சில தனியார் மருத்துவமனைகளிலும் கரோனோ நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்தச் சூழ்நிலையில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் அரசு, தனியார் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.
குறிப்பாக தனியார் மருத்துவமனைகளில் அதிக பணம் செலவழித்து சிகிச்சை பெற பொதுமக்கள் தயாராக இருந்தும்கூட, பெரும்பாலான தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு அனுமதி கிடைக்காத சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில், பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் படுக்கை அனுமதி கிடைக்காமல் பெண் நோயாளி ஒருவர் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாளையங்கோட்டை அடுத்த தியாகராஜ நகர் பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் மனைவி சந்திரிகா. இவருக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ரவிச்சந்திரன் தனது மனைவியை சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், அங்கு அவரை வார்டில் அனுமதிக்காமல் செவிலியர்கள், மருத்துவர்கள் அலட்சியம் காட்டியதாகக் கூறப்படுகிறது.
இதனால், சந்திரிகா பல மணி நேரம் ஆம்புலன்ஸில் இருந்துள்ளார். சந்திரிகாவுக்கு கரோனோ தொற்று இல்லை என்பதை உறுதி செய்திருப்பதாகவும், எனவே உடனடியாக வார்டில் வைத்து சிகிச்சை அளிக்க வேண்டுமென்றும் ரவிச்சந்திரன் மருத்துவர்களிடம் வலியுறுத்தியுள்ளார். இதற்கிடையில் மூச்சுத் திணறல் அதிகமாகி சந்திரிகா உயிரிழந்திருக்கிறார்.
மருத்துவமனையின் அலட்சியம் காரணமாகவே தனது மனைவி உயிரிழந்ததாக ரவிச்சந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். தொடர்ந்து நாளுக்கு நாள் 700க்கும் மேற்பட்டோர் திருநெல்வேலி மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டு வருவதால், நிலைமை இன்னும் மோசமாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 1100 படுக்கைகளில், 450 படுக்கைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கொடுக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் மருத்துவமனைகள் நிரம்பியுள்ளதால் மாற்று ஏற்பாடாக சிகிச்சை, பரிசோதனை மையங்களை அதிகரிக்க மாவட்ட ஆட்சியர் விஷ்ணு நடவடிக்கை எடுத்து வருகிறார். மாவட்ட ஆட்சியர் விரைந்து செயல்பட்டால் மட்டுமே திருநெல்வேலி மாவட்டத்தில் அபாய நிலையை தடுக்க முடியும் என தன்னார்வலர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: யோகா டீச்சரை கொலை செய்த வழக்கறிஞர் தற்கொலை!