திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அடுத்த மணிமுத்தாறு அருகே உள்ள அயன் சிங்கம்பட்டி என்ற பகுதியைச் சேர்ந்தவர், பேச்சிமுத்து (55). இவரது மகன் வனராஜ் (28). இருவரும் கூலித்தொழில் செய்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் நேற்று நள்ளிரவில் மணிமுத்தாறு அருகேயுள்ள அவர்களது விவசாய நிலத்திற்குச் சென்றதாக கூறப்படுகிறது. மேலும், அவர்களது நிலத்தை ஒட்டி 40 அடி கால்வாய் ஒன்று உள்ளது.
இந்த நிலையில், அந்த வழியாக சென்றபோது கால்வாயில் இருந்த மின்சாரம் தாக்கியதில் தந்தை, மகன் இருவரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். இவர்களது உடல் தண்ணீரில் மிதந்ததைக் கண்ட அங்கிருந்த விவசாயிகள், போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து தகவலறிந்து சென்ற மணிமுத்தாறு போலீசார், அம்பை தீயணைப்புத் துறையினர் உதவியுடன் இருவரது உடலையும் மீட்டனர்.
இதையும் படிங்க: நாயை கல்லால் அடித்ததை தட்டிக் கேட்ட மூதாட்டி கொலை.. சென்னையில் பயங்கரம்!
இதனையடுத்து, அவர்களது உடலைக் கைப்பற்றிய போலீசார், உடற்கூறு ஆய்வுக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், சம்பவம் நடந்த கால்வாயில் வனவிலங்குகளை வேட்டையாட மின்சாரம் வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
எனவே, விவசாய காவலுக்கு செல்லும்போது இருவரும் அதில் இருந்த மின்சாரம் தாக்கி உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, வனவிலங்குகள் வேட்டைக்காக மின்சாரம் போடப்பட்டதா அல்லது வேறு ஏதும் காரணத்திற்காக மின்சாரம் வைக்கப்பட்டதா என பல்வேறு கோணங்களில் அம்பை டிஎஸ்பி சதீஸ்குமார் தலைமையில், அம்பை சரக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தந்தை, மகன் இருவரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அயன் சிங்கம்பட்டி கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும், வனராஜ்-க்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அம்பத்தூர் போலீசார் மீதான தாக்குதல் விவகாரம்; 33 வடமாநிலத் தொழிலாளர்கள் கைது!