திருநெல்வேலி: தமிழ்நாட்டில் விடுபட்ட ஒன்பது மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்து சில தினங்களே ஆன நிலையில் நகர்ப்புற தேர்தல் நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் மாநில தலைமை தேர்தல் ஆணையம் ஈடுபட்டுவருகிறது.
விரைவில் நகர்ப்புற பகுதிகளுக்கான தேர்தல் நடத்தப்பட இருக்கும் நிலையில், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட உயர் அலுவலர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் வெ.பழனிகுமார் ஆய்வு மேற்கொண்டார்.
தேர்தல் பணி குறித்த ஆலோசனை
இந்தக் கூட்டத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி சார்ந்த இரண்டு மாநகராட்சி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டத்திலுள்ள 12 நகராட்சிகள் மற்றும் 103 பேரூராட்சிகளில் நகர்ப்புற தேர்தல் நடத்தப்படுவது தொடர்பான ஆலோசனைகள் மற்றும் அலுவலர்கள் தேர்தல் அன்று செயல்படும் விதம் குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டது.
இதையடுத்து உச்சநீதிமன்றம் கொடுத்துள்ள கால அவகாசம் குறைவாக உள்ளதால் தேர்தலுக்கான முதற்கட்ட பணிகளை உடனடியாக தொடங்கி வாக்குச்சாவடிகள் கண்டறிந்து அதனை தயார் செய்தல், வாக்காளர் பட்டியல் தயார் செய்தல் போன்ற பணிகளை உடனடியாக மேற்கொள்ளவும் ஆலோசனைக் கூட்டத்தில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 17 பேரூராட்சிகளில் 399 வாக்குச் சாவடிகளும், தென்காசி மாவட்டத்திலுள்ள 17 பேரூராட்சிகளில் 356 வாக்குச்சாவடி மையங்களும், தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பேரூராட்சிகளில் 318 வாக்குச்சாவடி மையங்களும், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளுக்கு 1057 வாக்குச்சாவடி மையங்களும் அமைக்கப்பட உள்ளன.
அதேபோல நெல்லை மாவட்டத்தில் உள்ள இரண்டு நகராட்சிகளில் 37 வாக்குச்சாவடி மையங்களும், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நகராட்சிகளில் 67 வாக்குச்சாவடி மையங்களும், தென்காசி மாவட்டத்தில் நகராட்சிகளில் 299 வாக்குச்சாவடி மையங்கள் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் 149 வாக்குச்சாவடி மையங்களும் அமைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட உள்ளது.
புதிதாக அறிவிக்கப்பட்ட நாகர்கோவில் மாநகராட்சி திருச்செந்தூர், களக்காடு, சுரண்டை, கொல்லங்கோடு, ஏழுதேசம் நகராட்சிகள் மற்றும் நாகர்கோவில் மாநகராட்சி உடன் இணைக்கப்பட்டிருக்கும் ஆளூர் மற்றும் தெங்கம்புதூர் பேரூராட்சிகளில் நகர்ப்புற தேர்தல் தற்போது நடைபெறாது என அலுவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சசிகலாவை அதிமுகவில் சேர்க்க கேள்வி எழவில்லை - கே.பி.முனுசாமி