நெல்லை: நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று முதல் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. இந்த 4 மாவட்டங்களில் இன்று (டிச.18) ரயில்கள், பெரும்பாலான இடங்களில் பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் திருநெல்வேலி - தென்காசி சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
திருநெல்வேலி தென்காசி சாலை துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த சாலையில் உள்ள ஆலங்குளம் கிராம மக்கள் பேசுகையில், “கடந்த 22 வருடத்தில் இந்த அளவு வரலாறு காணாத மழையை பார்த்ததில்லை. கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
3 வருடமாக சாலை வேலைகள் நடைபெறுவதால் இந்த மழை பாதிப்புக்கு முக்கிய காரணமாக உள்ளது. சாலை வேலையை விரைவில் முடித்திருந்தால் இந்தளவு தண்ணீர் வந்திருக்காது. சாலையின் ஓரம் உள்ள ஒன்றரை அடி உயர கரையை அகற்றியதால் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது” என்றார்
மற்றொரு கிராம நபர் பேசுகையில், “வெள்ளத்தினால் ஏற்கனவே கால்வாய் நீர் வெளியேறிய நிலையில், நெட்டூர் சாலையில் அதிகமாக தண்ணீர் தேங்கியுள்ளது. என்னுடைய 1 ஏக்கர் நிலம் நீரில் முழ்கியது. என்னுடைய 56 வருட வாழ்க்கையில் இந்த குளத்தில் இவ்வளவு தண்ணீர் வந்து பார்த்ததில்லை.
இதனால் என்னுடைய நிலங்கள் முழ்கியுள்ளது. 3 வருடமாக நடைபெற்று வரும் சாலை வேலை முடியாததால் இவ்வாறு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஊரில் உள்ள மார்க்கெட் முழுவதும் தண்ணீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.” என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: நெல்லையில் இரவு முதல் கொட்டி தீர்க்கும் மழை: மீட்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள்!