திருநெல்வேலி: காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தலைமையில் கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி எதிர்க்கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அப்போது விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை ரத்து செய்வது, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு, அத்திவாசிய பொருள்கள் விலை உயர்வு, பொதுத் துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கல், வேலைவாய்ப்பின்மை, பெகாசஸ் உளவு விவகாரம் உள்ளிட்ட ஒன்றிய பாஜக அரசின் அரசியல் நடவடிக்கைகளைக் கண்டித்து செப்டம்பர் 20 முதல் 30ஆம் தேதி வரை நாடு தழுவிய போராட்டம் நடத்த முடிவுசெய்யப்பட்டது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினர் கறுப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர்.
திருநெல்வேலியில் திமுக அலுவலகம் முன்பு முன்னாள் சபாநாயகரும், மாவட்டச் செயலாளருமான ஆவுடையப்பன் தலைமையில் இன்று (செப். 20) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அத்தியாவசிய பொருள்கள் விலை உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராகக் கோஷங்கள் எழுப்பப்பட்டன. திமுக உறுப்பினர்கள், நிர்வாகிகள் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: வட கொரியாவைப் போல் ஆட்சி நடத்தும் மோடி’ - விவசாயிகள் தலைவர் காட்டம்