நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டில் அரசுப் பள்ளியில் பயின்று நீட் தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு மூலம் மருத்துவப் படிப்பில் இடம் வழங்க சமீபத்தில் அரசாணை வெளியிடப்பட்டது. நடப்பாண்டிலேயே அரசாணைப்படி மாணவர்களுக்கு மருத்துவச் சீட்டு வழங்கவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்தார்.
அதன்படி நேற்று (நவ.19) நடைபெற்ற மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வில் 7.5 விழுக்காடு ஒதுக்கீடு மூலம் நீட் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பிற்கான ஆணை வழங்கப்பட்டது.
நெல்லை மாவட்டத்தில் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு மூலம் 17 மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். இதில் தரவரிசை அடிப்படையில் ஆறு மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ். படிப்பிலும் மீதமுள்ள 11 மாணவர்களுக்கு சித்த மருத்துவர், கால்நடை மருத்துவர், பல் மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில் எம்.பி.பி.எஸ். படிப்பில் இடம் கிடைத்த பகவதி, அகிலா, கௌசல்யா, சுடலை ராஜா, பிரியதர்ஷினி, அன்பரசன் ஆகிய ஆறு மாணவர்களை இன்று (நவ. 20) நெல்லை மாவட்ட ஆட்சியரை விஷ்ணு நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார்.
பின்னர் நெல்லை மாவட்ட அதிமுக சார்பில் ஆறு மாணவர்களுக்கும் வெள்ளை நிறச் சீருடை, மருத்துவப் படிப்புக்கான பாடப் புத்தகம், ஸ்டெதஸ்கோப் இலவசமாக வழங்கப்பட்டது.