கரோனா வைரஸ் நாடு முழுவதும் தீவிரமாகப் பரவிவரும் நிலையில் அதனைத் தடுக்கும் வகையில், தமிழ்நாட்டில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. இந்நிலையில்,நெல்லையிலும் 144 தடை உத்தரவை காவல் துறையினர் கடுமையான முறையில் அமல்படுத்திவருகின்றனர்.
இதன் காரணமாக பாளையங்கோட்டை, தினசரி காந்தி காய்கறிச் சந்தையில் மக்கள் கூடுவதைத் தடுக்கும்வகையில், காய்கறிச்சந்தையை பாளையங்கோட்டை காவல் துறை குடியிருப்பு திறந்தவெளி மைதானத்திற்கு மாற்றம்செய்ய முடிவுசெய்தனர். அதனைத் தொடர்ந்து, இன்று காலை அலுவலர்களிடம் கடைகளை மாற்ற உத்தரவிட்டனர்.
ஆனால், இதற்குக் கடைகளை மாற்ற முடியாது என்று வியாபாரிகள் அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இருந்தபோதும் காவல் துறையினர், மாநகராட்சி அலுவலர்கள் கடைகளை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றும், அதற்கான இடம் ஒதுக்கப்பட்டது எனக் கூறி காய்கறி சந்தையை மூடிவிட்டனர்.
மேலும், ஒரு சில கடைகள் மட்டும் மாற்று இடத்திற்கு மாற்றப்பட்டன. இதனைத் தொடர்ந்து, நெல்லை பாரதி மெடிக்கல் கடையில் மருந்து வாங்க அதிக மக்கள் வருகைதந்தனர்.
அவர்களுக்கு டோக்கன் அளிக்கப்பட்டு சமூக இடைவெளிவிட்டு அவர்கள் இருக்கையில் அமரவைக்கப்பட்டனர். மருந்துக் கடை ஊழியர்கள் அமர்ந்திருப்பவர்களிடம் மருந்துகளின் விவரங்களை வாங்கிச் சென்று அதன்படி மருந்துகளை வழங்கிவந்தனர்.
இதையும் படிங்க: அத்தியாவசிய தேவைகள் தடையின்றி கிடைத்திட ஐஏஎஸ் அலுவலர்களைக் கொண்ட 9 குழுக்கள்!