நெல்லையை அடுத்த பாளையங்கோட்டை முருகன்குறிச்சியைச் சேர்ந்தவர் வீரப்பெருமாள். அவரது மகள் வனிதா(வயது 20). தனியார் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வருகிறார். அதே கல்லூரியில் பயிலும், பாளையங்கோட்டை செந்தில் நகரைச் சேர்ந்த இசக்கி என்பவரது மகன் சங்கரநயினார் (வயது 21). இருவரும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், வனிதா, சங்கர நயினார் இருவரும் இன்று கல்லூரிக்குச் செல்லாமல், அருகன்குளம் அருகே உள்ள தாமிரபரணி ஆற்றில் குளித்து கொண்டிருந்ததாகத் தெரிகிறது. அப்போது சூழலில் சிக்கி வனிதா நீரில் மூழ்கியதாகவும், அவரைக் காப்பாற்ற முயன்ற சங்கரநயினாரும் நீரில் மூழ்கி விட்டதாகவும் கூறப்படுகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பாளையங்கோட்டை தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் தேடி இருவரது உடல்களையும் மீட்டனர்.
இதனையடுத்து, இருவரது உடல்களையும் உடற்கூறு ஆய்வுக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த தாழையூத்து காவல்துறையினர், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.