திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை பேரூராட்சியில் மக்கள் பணிகளை செய்யவிடாமல் பேரூராட்சியின் துணைத் தலைவர் செயல்படுவதாக கூறி, உதவி இயக்குனர் அலுவலகத்தில் அதிமுக மற்றும் திமுக இரண்டு தரப்பு வார்டு உறுப்பினர்களும் இணைந்து புகார் அளித்துள்ளனர்.
அதிமுகவின் வசம் உள்ள திசையன்விளை பேரூராட்சியில் அதிமுகவின் தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகிய இரண்டு பொறுப்புகளிலும் அதிமுகவினர் இருக்கின்றனர். இந்த நிலையில், பேரூராட்சியில் மக்கள் பணிகளை மேற்கொள்வதற்கும் வார்டு உறுப்பினர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கும் பேரூராட்சி நிர்வாகம் தொடர்ந்து காலதாமதம் செய்து வருவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன.
பேரூராட்சியில் பலதரப்பட்ட மக்கள் வசிக்கும் நிலையில் மக்களுக்கான நலப்பணிகளை செய்யவிடாமலும், அதிகாரிகள் தங்கள் பணிகளை செய்யவிடாமலும் பேரூராட்சியின் துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார் தடுத்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஆகவே, மக்கள் நலத்திட்டங்களை தடுத்து நிறுத்தும் திசையன்விளை பேரூராட்சி துணைத் தலைவர் மீது நடவடிக்கை எடுக்கவும், அவரை அப்பணியில் இருந்து நீக்கவும் வலியுறுத்தி அவர் அங்கம் வகிக்கும் அதிமுக உட்பட திமுக வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் இணைந்து கையொப்பமிட்ட மனுவை பேரூராட்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் அளித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து, திசையன்விளை பேரூராட்சியில் நடைபெற்று வரும் இந்த பிரச்சனை காரணமாக மக்களுக்கு செய்ய வேண்டிய அன்றாட பணிகள் மற்றும் பேரூராட்சி நிர்வாகத்தின் செயல்பாடுகள் முடங்கி கிடப்பதாக அதிமுக மற்றும் திமுக உறுப்பினர்கள் புகார் அளித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பாலான மாநகராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகளை ஆளுங் கட்சியான திமுக கைப்பற்றியது. அதேசமயம் பல்வேறு மாவட்டங்களில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் ஆளுங்கட்சி கவுன்சிலர்களே மேயர், நகராட்சி தலைவர்கள் மற்றும் பேரூராட்சி தலைவர் ஆகியோருக்கு எதிராக கோஷம் எழுப்பும் சம்பவம் வாடிக்கையாக நடைபெற்று வருகிறது.
அதேபோல், உள்ளாட்சி அமைப்புகளில் முறைகேடு நடப்பதாக ஆளுங்கட்சி மீது ஆளுங்கட்சியின் கவுன்சிலர்களே குற்றம் சாட்டும் சம்பவமும் நடைபெற்று வருகிறது. இது போன்ற சூழ்நிலையில், நெல்லை மாவட்டத்தில் அதிமுக வசம் உள்ள பேரூராட்சியில் மக்கள் பணி நடைபெறவில்லை என அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கட்சி கவுன்சிலர்களும் இணைந்து புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக உறுப்பினரான ஆறுமுக தேவி, 'எங்களது திசையன்விளை பேரூராட்சியின் துணைத் தலைவர், எந்த ஒரு அடிப்படை தேவைகளையும் செய்யவிடாமல் தடுத்து வருவதாகவும், வார்டுக்கு நல்லது செய்வேன் என்றும் மக்களுக்கு நல்லது செய்வேன் என்றும் அப்பகுதி மக்கள் தன்னை தேர்ந்தெடுத்துள்ளதாகவும் அடிப்படை தேவையான குடிநீருக்கு பைப் பொருத்துவதற்கேஇடையூறு செய்து மிரட்டி அதை அப்புறப்படுத்திவிட்டனர் என்றும் தெரிவித்தார்.
மேலும் கூறிய அவர், பொதுமக்களுக்கான குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகளைக் கூட செய்ய முடியாமல் நாங்கள் இருக்கிறோம். இவ்வாறாக இடையூறு செய்துவரும் பேரூராட்சி துணைத் தலைவரை, நகராட்சி சட்டம் 1920 பிரிவு 49-ன் படி அவரது பேரூராட்சி துணைத் தலைவர் பதவி விலக்குக் கோரி பேரூராட்சிகளின் உதவி இயக்குனரிடம் மனு அளித்துள்ளதாக' கூறினார். மேலும், இதுகுறித்து அளித்துள்ள மனுவில் மொத்தமுள்ள 18 கவுன்சிலர்களில் அதிமுக மற்றும் திமுகவைச் சேர்ந்த 10 கவுன்சிலர்கள் அதில் கையொப்பமிட்டுள்ளாதாகவும் அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய திமுக உறுப்பினரான நடேசன், 'திசையன்விளையில் தினம் தினம் பஞ்சாயத்துதான். ஒரு அதிகாரி உண்மையாக வேலைப் பார்த்தால் அவர்கள் மீது பொய் வழக்கு போடுகின்றனர். இப்படிதான் திசையன்விளையில் அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுப்பது நடக்கிறது. ஒரு அத்தியாவசிய பிரச்னைக்கு கூட, துரிதமில்லாமல் தாமதமாக தான் வேலை நடக்கிறது.
சுகாதாரத்துறை கூட ரொம்ப மோசமாக உள்ளது. தங்கள் பகுதிக்கு ஒரு Sanitary inspector, EO வருவதற்கு பயப்பிடுகின்றனர். இதற்கு காரணம், நிர்வாகத்தோட குறைகேடு; மக்களுக்கு எந்தவொரு பணிகளும் நடப்பதில்லை. ஆகவே, இதுகுறித்து உதவி இயக்குனரிடம் மனுவாக அளித்துள்ளோம். அடுத்ததாக, மாவட்ட ஆட்சியரையும் சந்திக்க உள்ளோம்' என்று கூறினார்.
இதையும் படிங்க: சாதி பெயரைச் சொல்லி திட்டியதாக நெல்லை மேயர் மீது புகார்.. தொடரும் திமுக உட்கட்சி பூசல்