திருநெல்வேலி: தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அறநிலையத்துறையில் பல அதிரடி மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. பல கோடி மதிப்பிலான கோயில் சொத்துகள் மீட்கப்பட்டு வருகிறது. அதேபோல் கோயில் பூஜைகளில் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. குறிப்பாக அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம், தமிழில் தேவாரம் பாடுதல் போன்ற திட்டங்களைச் செயல்படுத்தினர்.
இதுபோன்ற சூழலில் கோயில் குடமுழுக்கு தமிழ் மொழியில் நடத்த வேண்டுமென சமூக ஆர்வலர் ஒருவர் தொடுத்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை கருத்து கேட்பு கூட்டம் நடத்த உத்தரவிட்டது. அந்த வகையில் நீதிமன்ற ஆணைப்படி தமிழ்நாடு அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்துவது தொடர்பாக திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மண்டல அளவிலான கருத்துக் கேட்பு கூட்டம் திருநெல்வேலி பாளையங்கோட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
நீதிமன்றம் மூலம் அமைக்கப்பட்ட கமிட்டி உறுப்பினர்களான குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார், சுகி சிவம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், பாஜக நிர்வாகிகள், இந்து அமைப்பினர் மற்றும் சிவனடியார்கள் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்வதற்காக வந்திருந்தனர்.
கூட்டம் தொடங்கியவுடன் சிலர் மேடை அருகில் சென்று இந்து அறநிலையத்துறை சார்பில் நடத்தப்படும் கருத்து கேட்பு கூட்டத்தில் வைக்கப்பட்டுள்ள பேனரில் இந்து கடவுள் படம் இடம்பெறவில்லை என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவரை தொடர்ந்து பல்வேறு இந்து அமைப்பினரும் கடவுள் படம் வைக்க கோரி கூச்சலிட்டனர். மேலும் ஆகம விதிப்படியே குடமுழுக்கு நடத்த வேண்டும் தமிழில் நடத்தக் கூடாது என பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அப்போது அங்கிருந்த தமிழ் தேசிய தன்னுரிமை கட்சி தலைவர் வியனரசு இந்து அமைப்பினருக்கு எதிர்ப்பு தெரிவித்தால் இரு தரப்பினரிடைய கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. தொடர்ந்து பூஜைகளில் தமிழ் பாடல்கள் சேர்க்க வேண்டுமென சுகி சிவம் பேசிய பேச்சுக்கு பாஜக மற்றும் இந்து அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.
இதையடுத்து மாநகர காவல் துணை ஆணையர் சரவணகுமார் தலைமையில் போலீசார் கூச்சலிட்டவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும் போலீசாரின் சமாதானத்தை ஏற்காமல் இந்து அமைப்பினர் மேடை முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேடையில் இருந்த கமிட்டி உறுப்பினர்கள் கேட்டுக் கொண்ட பிறகும் அவர்கள் தொடர்ந்து கூச்சலிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்து அமைப்பினரின் கோரிக்கையை ஏற்று மேடையில் வைக்கப்பட்டுள்ள பேனரில் கடவுள் படம் மாட்டப்பட்டது. ஆனால் பாஜக மற்றும் இந்து அமைப்பினர் தொடர்ந்து வாக்குவாதம் செய்தனர். இதற்கிடையில் கூச்சல் குழப்பம் காரணமாக கருத்து கேட்பு கூட்டம் முடிந்து விட்டதாகவும், கூட்டத்தில் பங்கேற்றவர்கள் தங்கள் கருத்துக்களைத் தபால் மூலமாக இந்து அறநிலை துறை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்குமாறும் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அறிவித்தார்.
அதை தொடர்ந்து போலீசார் ஒவ்வொருவரையும் சமாதனப்படுத்தி மண்டபத்தை விட்டு அனுப்பி வைத்தனர் கூட்டத்தின் நிறைவில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், முதன் முதலாக நெல்லை, தூத்துக்குடி மண்டலத்தில் கருத்து கேட்கப்பட்டுள்ளது. கலந்து கொண்டவர்களிடம் எழுத்து வடிவில் கருத்துக்கள் பெறப்பட்டுள்ளது. தொடர்ந்து தமிழகம் முழுவதும் மண்டலம் வாரியாக கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டு இதுகுறித்த அறிக்கை அரசு மூலமாக நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும் என தெரிவித்தார்.
முதல் கூட்டமே கடும் எதிர்ப்போடு நடைபெற்ற சம்பவம் கமிட்டி உறுப்பினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடைபெறுவதை விட்டு கொடுக்க கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் இந்து அமைப்புகள் மற்றும் பாஜகவினர் திட்டமிட்டே கூட்டத்தில் கூச்சல் குழப்பம் ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. அதன்படி கூட்டத்துக்கு முந்தைய நாளே நெல்லை மாவட்ட பாஜக நிர்வாகிகளும் இந்து அமைப்பு நிர்வாகிகளும் ஒன்று கூடி கூட்டத்தில் தமிழில் குடமுழுக்கு செய்ய கடும் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டுமென முடிவெடுத்தாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: நத்தம் மாரியம்மன் கோவில் மாசித் திருவிழா; 15 ஆயிரம் பக்தர்கள் பூக்குழி இறங்கினர்