திருநெல்வேலி: சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தைச் சேர்ந்த மாணவி, ரஞ்சிதா. நெல்லை மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.பி.ஏ படித்து வருகிறார். கல்லூரியில் நடைபெற்ற ஆண்டு விழா கலை நிகழ்ச்சிக்காக தனது ஊரான சிவகங்கையில் இருந்து பறை இசைக் கருவிகளை கல்லூரிக்குக் கொண்டு சென்றார்.
நிகழ்ச்சி முடிந்த உடன் நேற்று மாலை (மே 10) சொந்த ஊருக்கு பறையிசைக் கருவிகளை கொண்டு செல்வதற்காக திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து, மதுரை செல்லும் அரசுப் பேருந்தில் ஏறியுள்ளார். இசைக் கருவிகளை கொண்டு செல்ல நடத்துநர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். அவர் மாணவியிடம் முனுமுனுத்தபடி இருந்த நிலையில் டிக்கெட் கேட்க வந்தபோது, மாணவியை தவறாகப் பேசி பறை இசைக் கருவிக்கு பேருந்தில் இடமில்லை எனக்கூறி, பாதி வழியில் இறங்கச் சொல்லி உள்ளார்.
உடன் வந்த மற்ற பயணிகள் வற்புறுத்தல் காரணமாக பறை இசைக்கருவிகளுடன் சேர்த்து மாணவியை தகாத வார்த்தைகளால் திட்டி, வண்ணாரப்பேட்டை பேருந்து நிறுத்தத்தில் இறக்கிவிட்டுச் சென்றுள்ளார். பாதி வழியில் இறங்கி நின்று தனியாக அழுது கொண்டிருந்த மாணவியின் நிலை பரிதாபகரமாக இருந்தது. பின்னர் அங்கிருந்த செய்தியாளர்கள் உதவியோடு மாணவியை வேறு பேருந்தில் ஏற்றி விட முயன்றபோதும் பெரும்பாலான பேருந்து ஓட்டுநர்கள் இசைக்கருவிகளை ஏற்ற அனுமதிக்கவில்லை.
ஒரு வழியாக நெல்லையில் இருந்து கோயம்புத்தூர் சென்ற அரசுப்பேருந்து நடத்துநர் பாஸ்கர், செய்தியாளர்களின் மூலம் மாணவியின் சூழ்நிலையைப் புரிந்து கொண்டு மதுரையில் மாணவியை குறிப்பிட இடத்தில் இறக்கி விடுவதாகக் கூறி, மாணவி கொண்டு வந்த பறை இசைக் கருவிகளுடன் மாணவியை பேருந்தில் ஏற்றிச்சென்றார். ஒரு மாணவி என்று கூட பார்க்காமல் நடத்துநர் அவமரியாதையாக நடந்து கொண்ட சம்பவம் சமூக ஆர்வலர் மற்றும் இசை ஆர்வலர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதற்கிடையில் இசைக் கருவிகளை அரசுப்பேருந்துகளில் இலவசமாக எடுத்துச்செல்லலாம் என்று அரசாணை இருந்தும் அதைப் பின்பற்றாமல் மாணவியை அவமதித்த நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இது குறித்து நெல்லை அரசு போக்குவரத்துக் கழக அதிகாரி சரவணன் விசாரணை மேற்கொண்டார். அதில், மாணவி அவமதிக்கப்பட்ட பேருந்தின் நடத்துநர் கணபதி என்பது தெரியவந்தது.
இதையடுத்து இசைக்கருவிகளை அரசுப்பேருந்தில் இலவசமாக எடுத்துச் செல்லலாம் என அரசாணை இருந்தும் அதை அமல்படுத்தாத காரணத்திற்காகவும் பயணிகளிடம் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட காரணத்திற்காகவும் நடத்துநர் கணபதியை ஐந்து நாட்கள் சஸ்பெண்ட் செய்து நெல்லை அரசு போக்குவரத்துக் கழக ஒழுங்கு நடவடிக்கை குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும் நடத்துநர் கணபதி திசையன்விளை பணிமனைக்கு அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். பொதுவாக கூலித் தொழிலாளர்கள், வியாபாரிகள் தங்கள் சுமைகளை பேருந்தில் கொண்டு செல்லும் போதும் பெரும்பாலான நடத்துநர்கள், அவர்களிடம் அவமரியாதையாக நடந்துகொள்ளும் சம்பவம் வாடிக்கையாக நடந்து வருகிறது.
சுமைகளுக்கு லக்கேஜ் கட்டணம் வசூலிக்கும் நடைமுறை இருந்தும் நடத்துநர்கள், அதைப் பின்பற்றாமல் பலரை இதுபோன்று நடுவழியில் இறக்கி விடும் சம்பவமும் நடைபெறுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில் மாணவி விவகாரத்தில் நடத்துநர் மீது உடனடியாக எடுக்கப்பட்ட நடவடிக்கை தவறு செய்யும் சக ஊழியர்களுக்கு ஒரு பாடமாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
இதையும் படிங்க: மாணவி நந்தினிக்கு இல்லம்தேடி சென்று கவிஞர் வைரமுத்து தங்கப்பேனா பரிசு!