திருநெல்வேலி : கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த 23ஆம் தேதி நடைபெற்ற கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து தமிழ்நாட்டில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு பல்வேறு இடங்களில் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது.
காரில் இருந்த ஜமேஷா முபீன் உயிரிழந்த நிலையில் அவரது வீட்டில் இருந்து வெடி மருந்துகள் எடுக்கப்பட்டதால் வழக்கு விஸ்வரூபம் எடுத்தது. ஜமேஷா முபீனின் கூட்டாளிகள ஆறு பேரை காவல் துறை கைது செய்துள்ளது. மேலும் காவல் உயர் அதிகாரிகள் கோவையில் முகாமிட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமைக்கு ( என்ஐஏ) மாற்றி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக நெல்லை மாவட்டம் ஏர்வாடியை சேர்ந்த இஸ்லாமிய பிரச்சார இயக்க நிர்வாகி முகமது காதர் மன்பை மற்றும் மேலப்பாளையத்தைச் சேர்ந்த முகமது உசேன் மன்பை ஆகிய இருவரிடம் காவல்துறையினர் சுமார் மூன்று மணி நேரம் நேற்று இரவு விசாரணை மேற்கொண்டனர்.முகமது உசேன் மண்பை ஏற்கனவே கோயம்புத்தூரில் மத குருவாக இருந்துள்ளார்.
இந்நிலையில், நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் வெடிகுண்டு பிரிவு காவல்துறை நிபுணர்கள் திடீர் சோதனை நடத்தினர். குறிப்பாக பேருந்து நிலையத்தில் உள்ள பல அடுக்கு வாகன நிறுத்தத்தில் அவர்கள் சோதனை மேற்கொண்டனர். அங்கிருந்த இருசக்கர வாகனங்களில் மர்ம பொருட்கள் ஏதேனும் இருக்கிறதா என்பது குறித்து வெடிகுண்டு கண்டறியும் கருவியை கொண்டு சோதனை செய்தனர்.
தொடர்ந்து அங்கிருந்த தனியார் காவலாளிகள் வாகனம் நிறுத்த வரும் கார்களிலும் சோதனை செய்தனர். கோவையில் கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வரும் விசாரணைக்கு இடையே நாள்தோறும் பல ஆயிரம் மக்கள் வந்து செல்லும் புதிய பேருந்து நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க :என்ஐஏவுக்கு தமிழ்நாடு காவல்துறை ஒத்துழைப்பு வழங்கும்: டிஜிபி சைலேந்திர பாபு