திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டு வர மாவட்ட நிர்வாகமும் மாநகராட்சியும் இணைந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. வெளியூரிலிருந்து வருபவர்களைக் கண்காணிப்பதற்காக திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான், காவல் கிணறு ஆகிய இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்து மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இருப்பினும் மாவட்டம் முழுவதும் கரோனா தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை 796 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த மூன்று தினங்களாக திருநெல்வேலியில் தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 43 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இன்று 30க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் இன்னும் ஓரிரு தினங்களில் திருநெல்வேலி மாவட்டத்தில் தொற்று எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து திருநெல்வேலி மாவட்டத்திற்கு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள அபூர்வா கடந்த சனிக்கிழமை மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து பாதிப்புகள் அதிகரித்தாலும் தனியார் கல்லூரிகளில் சிகிச்சை வசதிகள் ஏற்பாடு செய்யப்படும் என்றும், அனைவருக்கும் சிகிச்சை அளிக்கத் தயாராக இருப்பதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.