திருநெல்வேலி: தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் இன்று பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அலுவலர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனைக்கு மேற்கண்ட இரண்டு கட்சித்தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் சோதனை குறித்து எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத்தலைவர் நெல்லை முபாரக் மேலப்பாளையத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அத்த பேட்டியில், “என்ஐஏ சட்டவிரோதமான சோதனை மற்றும் கைது நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதை வன்மையாக கண்டிக்கிறோம். எஸ்டிபிஐ கட்சி ராமநாதபுரம் மேற்கு மாவட்டத்தலைவர் பராக் அப்துல்லா வீட்டில் நள்ளிரவு அத்துமீறி நுழைந்து சோதனை நடத்தி, டெல்லியில் பதிவு செய்யப்பட்ட எப்ஐஆர்-ன் கீழ் என்ஐஏ அவரை கைது செய்துள்ளது. மதுரையில் எஸ்டிபிஐ மாநிலச்செயலாளர் நஜிமா பேகம் வீட்டில் அத்துமீறி நுழைந்து கைது செய்து அழைத்துச்செல்லும்போது, அவரது பணத்தை எடுத்துச்சென்றுள்ளனர்.
அவரது கணவர் கையெழுத்தபோட மறுத்தபோது பத்து மாத குழந்தை கதறி அழுதபோதும் கையெழுத்து போட்டால் தான், பால் குடிக்க அனுமதிப்போம் என அராஜகத்தோடு மனித உரிமை மீறலில் ஈடுபட்டுள்ளனர். நாடு முழுவதும எஸ்டிபிஐ, பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா தலைவர்களை உடனடியாக நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும். மாநில சுயாட்சி பேசும் தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சியின் சிறப்பை கெடுக்கவே இதுபோன்று கைது செய்கிறார்கள்.
எனவே, ஜனநாயகப்படி அனைத்து ஜனநாயக சக்திகளும் இதைக் கண்டிக்க முன்வர வேண்டும். எஸ்பிடிஐ கட்சி தலைவர்களின் குரலை நெறிப்பதற்காகவும் தனக்கு எதிராக குரல் எழாது என ஒன்றிய அரசு நினைப்பது ஆபத்தானது.
இந்த விவகாரத்தில் மதச்சார்பற்ற அமைப்புகள் கண்டனம் தெரிவிக்காதது வருத்தம் அளிக்கிறது. ஒன்றிய அரசுக்கு எதிரான எங்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவோம் என்று நினைத்தால் அவர்கள் தப்பு கணக்கு போடுகிறார்கள் என்று எச்சரிக்கிறோம். எனவே, ஜனநாயக முற்போக்கு சக்திகள் இந்த கைது நடவடிக்கையைக் கண்டிக்க முன்வர வேண்டும்.
நாட்டில் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் இருந்தாலும் எஸ்டிபிஐ கட்சி உண்மையைச் சொல்கிறது. ஒன்றிய அரசின் தவறுகள் இருப்பதை தோலுரிக்கும் எங்கள் போராடடத்தை முடக்கிவிட்டால் இந்தியாவில் எந்த செயலையும் செய்துவிடலாம் என மோடியும் அமித்ஷாவும் கருதுகிறார்கள். NIA ஏவல்காரர்கள் போல் செயல்பட்டு வருகிறார்கள். இந்த சோதனையில் அவர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை . போலி வழக்கில் நாடு முழுவதும் அராஜகத்தை நடத்தி வருகிறது. எனவே, எங்கள் போராட்டத்தை இன்னும் வீரியத்துடன் கொண்டு செல்வோம்.
இன்று நாங்கள் என்றால் நாளைக்கு யார் வேண்டுமென்றாலும் குறி வைக்கப்படலாம். மோசமான அரசாக இது உள்ளது. பயங்கரவாதத்தைப்பேசி வரும் ஆர்எஸ்எஸ் மீது சோதனை நடத்த வக்கில்லாத அரசு உயர்ந்த நோக்கம் கொண்ட எங்களை குற்றவாளிகளாக முயற்சித்து வருகிறது. எனவே, அம்பேத்கர், காந்தியின் ஆத்மா அவர்களை மன்னிக்காது. சிறுபான்மை மக்களை ஒடுக்க வேண்டும் என்பதற்காகவே இந்த கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். ஒன்றிய அரசு எஸ்டிபிஐ வளர்ச்சியைக் கண்டு அஞ்சுகிறது. திமுக உட்பட அனைத்துக் கட்சிகளுக்கும் எங்களது அரசியல் வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
எங்களை அச்சுறுத்தவே இது போன்ற சோதனை நடத்துகிறார்கள். எனவே இந்த விவகாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பேற்க வேண்டும். எதிர்காலத்தில் தமிழ்நாட்டிற்குள் என்ஐஏ நுழையமுடியாது என்கின்ற சட்டத்தை தமிழ்நாடு அரசு கொண்டுவர வேண்டும். எங்கள் அலுவலகத்தில் பயங்கரவாத பயிற்சி எங்கேயாவது நடைபெறுவதை நிரூபிக்க முடியுமா.
பாஜக, ஆர்எஸ்எஸ் கரங்களை ஒடுக்க வேண்டிய கடமை காவல் துறைக்கு உள்ளது. தமிழ்நாடு காவல்துறை ஸ்காட்லாந்துக்கு இணையானது. ஆனால் அவர்களுக்கே தெரியாமல் இந்த சோதனை நடத்துகிறார்கள். தமிழ்நாடு அரசு ஏதோ சிறுபான்மை சமுதாயத்திற்கான பிரச்னை என்று நினைக்க வேண்டாம்.
இதை எதிர்க்க வேண்டிய முதல் ஆள் தமிழ்நாடு முதலமைச்சர் தான். இந்த விஷயத்தில் நீதி பெறும் எல்லா விஷயத்தையும் தமிழ்நாடு அரசு செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைக்கும் வரை மாணவர்கள் தேர்வுக்கு படித்துத்தான் ஆக வேண்டும்'