தமிழ்நாடு முன்னாள் சட்டத்துறை அமைச்சர் இசக்கி சுப்பையா தலைமையில், நெல்லை மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அக்கட்சியில் இருந்து விலகினர். இந்நிலையில் இவர்கள் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி முதலமைச்சர், துணை முதலமைச்சர் முன்னிலையில் தென்காசியில் நடைபெற்றது.
இந்த விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பேசுகையில், திருநெல்வேலி மாவட்டம் அசந்து போகும் அளவில் ஒரு நிகழ்வு நடைபெறுகிறது. அதிமுகவை உடைப்பது போல் சிலர் கனவு கண்டனர். ஆனால் ஒருபோதும் நடக்காது. திமுக தலைவர் ஸ்டாலின் அதிமுகவை உடைக்க பல்வேறு திட்டங்களை போட்டார். அது ஒன்று கூட நிறைவேறவில்லை. இல்லாததை வாக்குறுதிகளாக மக்களிடம் கூறி நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிப் பெற்றுள்ளார்.
மேலும் ஒருவரை ஏமாற்ற வேண்டும் என்றால் அவரது ஆசையினை தூண்ட வேண்டும், அப்படி தான் திமுக வெற்றிப் பெற்றுள்ளது. அதிமுகவில் இருந்த கறுப்பு ஆடுகள் வெளியேறி விட்டதால், கட்சி துய்மை அடைந்து விட்டது. திருநெல்வேலியில் இருந்து பிரித்து தனி மாவட்டமாக தென்காசியை அறிவிக்க வேண்டும் என இந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து விரைவில் பரீசிலனை செய்யப்படும் என்றார்.