நெல்லை மாவட்டம் கடையம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள பகுதி தோரணமலை. இங்கு புகழ்பெற்ற முருகன் கோயில் அமைந்துள்ளது. முண்டந்துறை புலிகள் காப்பக வனச்சரகம் சார்ந்த பகுதிகள் என்பதால் மான், மிளா, கரடி, செந்நாய் போன்ற வனவிலங்குகள் அவ்வப்போது ஊருக்குள் புகுவதும், வனத்துறையினரை அழைத்து விலங்குகளை விரட்டுவதும் இங்கு வாடிக்கையான ஒன்று.
இந்நிலையில் கடையம் அருகே கடனா அணைக்கட்டு பகுதியின் கீழே பெத்தான்பிள்ளை குடியிருப்பு பகுதிக்குள் சிறுத்தை புகுந்து ஆடு, நாய் போன்றவற்றை இழுத்துச்சென்று இரையாக்குவது தொடர்ச்சியாக நடைபெற்ற நிலையில் வனத்துறையினர் கூண்டு வைத்து சிறுத்தையை பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட்டு வந்தனர்.
கடந்த சில நாட்களாக அந்த பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் பெரிய அளவில் இல்லை என்கின்றனர் பொதுமக்கள். இந்த நிலையில் நேற்று தோரணமலைப் பகுதியில் சிறுத்தை ஒன்று இறந்த நிலையில் கிடந்துள்ளது. பாம்பு கடித்து சிறுத்தை இறந்திருக்கலாம் என கூறப்படும் நிலையில் விஷம் வைத்து யாரேனும் சிறுத்தையை கொன்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முயல், மான், காட்டுப்பன்றி வேட்டை போன்றவற்றை தடுப்பதற்காக பொதுமக்களிடம் இருந்து சில விலை உயர்ந்த ராஜபாளையம், சிப்பி பாறை, கன்னி இன நாய்களை வனத்துறையினர் பறிமுதல் செய்துள்ளார். இந்த ஆத்திரத்தில் யாரேனும் வேண்டுமென்றே சிறுத்தையை விஷம் வைத்து கொன்றிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. சிறுத்தையின் உடலை உடற்கூறாய்வு செய்த பின் வியாழக்கிழமை மாலை அதன் உடல் எரியூட்டப்பட்டது.

இதுகுறித்து ஈடிவி பாரத் தரப்பில் வனத்துறையினரிடம் கேட்ட போது, உடற்கூறாய்வு குறித்த அறிக்கை தடயவியல் நிபுணர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும், இரண்டு வாரங்களுக்குள் காரணம் தெரியவரும் என்கின்றனர். தற்போது வரை சிறுத்தையை பாம்பு கடித்திருக்கலாம் என்றே யூகிக்க படுகிறது என்றும் தெரிவித்தனர்.
வழக்கமாக இதுபோன்று மர்மமான முறையில் வனவிலங்குகள் இறக்க நேரிட்டால் உடற்கூறாய்வு செய்து அந்த விலங்கு இறந்ததற்கான உண்மைக்காரணம் தொடர்பான அறிக்கை கிடைக்கும் வரை எரியூட்டமாட்டார்கள். ஆனால் தற்போது இந்த சிறுத்தையின் உடல் உடனடியாக எரிக்கப்பட்டிருப்பது அதன் மர்மச்சாவில் சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது. மேலும், காப்புக்காடு பகுதிகளில் போதிய வனத்துறை கண்காணிப்பு இல்லாததும், புலிகள் காப்பகம் என்ற வரையறையை நினைவில் கொள்ளாமல் பொதுமக்களை தாறுமாறாக அனுமதிப்பதுமே இதுபோன்ற சமூகவிரோத, வனவிரோத சம்பவங்களுக்கு காரணம் எனவும் இயற்கை ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.