நெல்லை: தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள ரெட்டியார்பட்டி பகுதியைச் சேர்ந்தவர், மயில்ராஜ். இவரது மனைவி சுகன்யா. இவர்களுக்கு மூன்று வயதுடைய மகிதா என்ற பெண் குழந்தையும் ஒன்றரை வயதில் மகிஸ்ரீ என்ற பெண் குழந்தையும் உள்ளனர். ஒன்றரை வயது பெண் குழந்தையுடன் கணவன் மயில்ராஜ் மற்றும் மனைவி சுகன்யா ஆகிய இருவரும் நெல்லை நோக்கி மானூர் அருகே சங்கரன்கோவில் சாலையில் வந்து கொண்டிருந்தனர்.
அப்போது அதிவேகமாக பின் தொடர்ந்து வந்த கார் ஒன்று இவர்கள் சென்ற இருசக்கர வாகனத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில், கையில் இருந்த கைக் குழந்தை சாலையில் தூக்கி வீசப்பட்ட நிலையில் கணவன் மனைவி இருவரும் காருக்கு அடியில் சிக்கி சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில், கார் அவர்கள் இருவர் மீதும் ஏறி இறங்கி நின்றது.
இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர், உடனடியாக விபத்து ஏற்பட்ட பகுதியில் வந்து படுகாயம் அடைந்த இருவரையும் மீட்டதுடன் சாலையில் தூக்கி வீசப்பட்ட குழந்தையினை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் ஆம்புலன்சில் செல்லும் போதே சுகன்யா உயிரிழந்தார். தொடர்ந்து, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மயில்ராஜும் சிகிச்சைப் பலனின்றி உயிர் இழந்தார்.
அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவில் ஒன்றரை வயது குழந்தை மகிஸ்ரீ அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை நடந்து வருகிறது. இந்த பயங்கர விபத்து தொடர்பாக, கார் ஓட்டி வந்த தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரியை சேர்ந்த அஜ்மத் என்பவர் மீது மானூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், இந்த விபத்து குறித்த பதைபதைக்க வைக்கும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. அதில் ஒன்றரை வயது குழந்தை மகிஸ்ரீ சாலையில் தூக்கி வீசப்பட்டு கிடப்பது போன்றும்; அந்த வழியாக வந்த ஒரு நபர் அந்த குழந்தையை மீட்பது போன்றும் காட்சிகள் உள்ளன.
இதையும் படிங்க: கார் விபத்து வழக்கு: செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் ஆஜர்