திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தாலுகா சங்கனாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் குமாரி பகவதி. இவர் இரண்டு நாள்களுக்கு முன்பு தனது கணவர், மகளுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சென்று புகார் ஒன்றை அளித்தார். அதில், “எங்களுக்குச் சொந்தமாக மதுரை மாவட்டம் கருங்குளத்தில் ரூ.50 லட்சம் மதிப்பிலான 10 சென்ட் நிலம் உள்ளது. அந்த நிலத்தில் திருநெல்வேலி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் மற்றும் அவரது மகன்கள் உள்பட 10 பேர் அத்துமீறி நுழைந்து வேலி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அதனைத் தடுக்க முயன்ற எங்களை, "துப்பாக்கியால் உங்கள் குடும்பத்தினர் அனைவரையும் சுட்டுக் கொலை செய்துவிட்டு, உங்களுக்குச் சொந்தமான இடத்திலேயே புதைத்துவிடுவோம்” என கொலை மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து நாங்கள் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தால், காவல் துறையினர் புகாரை ஏற்க மறுக்கின்றனர். எனவே எங்களுக்கு தகுந்த பாதுகாப்புடன் நிலத்தை மீட்க உதவ வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா, குமாரி பகவதி அளித்த புகாரின் பேரில் பழவூர் காவல் நிலையத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம், அவரது இரண்டு மகன்கள் உள்பட நான்கு பேர் மீது துப்பாக்கி காட்டி மிரட்டுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட எட்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மதுக்கடைகளைத் திறப்பது கரோனா பரப்புவதற்கான திட்டம் - திருமாவளவன்