திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை சேர்ந்த வழக்கறிஞர் பிரம்மா. இவர் நேற்று முன்தினம் பாளையங்கோட்டை முருகன்குறிச்சி பகுதியில் உள்ள ஶ்ரீ மதுரம் தனியார் ஹோட்டலுக்கு டீ குடிக்கச் சென்றுள்ளார். அப்போது ஹோட்டல் நிர்வாகிகள் மற்றும் ஊழியர்களால் சரமாரியாக தாக்கப்பட்டார். பின்னர் சம்பந்தப்பட்ட ஹோட்டல் நிர்வாகம் மீது வழக்கறிஞர் பிரம்மா 50க்கும் மேற்பட்ட நுகர்வோர் வழக்குகள் தொடர்ந்துள்ளதாகவும், அதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் தாக்குதல் நடைபெற்றதாகவும் கூறப்பட்டது.
அதேசமயம் வழக்கறிஞர் பிரம்மா அடிக்கடி ஹோட்டல் நிர்வாகத்தினரை மிரட்டும் தொனியில் செயல்பட்டதால் ஏற்பட்ட கோபத்தில் தான் இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றதாகவும் கூறப்பட்டது.
இந்த விவகாரத்தில் பாளையங்கோட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து ஸ்ரீ மதுரம் ஹோட்டல் நிர்வாகிகள் ஹரி, மணிகண்டன் மற்றும் சூப்பர்வைசர்கள் 3 பேர் என ஐந்து பேரை கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர். நெல்லை மாவட்ட நீதிமன்றம் ஐந்து பேருக்கும் வரும் நவம்பர் 6ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த விவகாரத்தில் தற்போது பாளையங்கோட்டை காவலர்கள் வழக்கறிஞர் பிரம்மா மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதாவது மேற்கண்ட ஹோட்டல் சூப்பர்வைசராக பணிபுரிந்த பொன்னரசு அளித்த புகாரில், சம்பவத்தன்று வழக்கறிஞர் பிரம்மா உணவு ஆர்டர் கொடுத்தார். அப்போது அவர் என்னை பார்த்து நீ எப்படி ஐயர் ஹோட்டலில் வேலை பார்க்கிற என சாதி பெயர் சொல்லி திட்டினார்.
அதற்கு நீங்கள் எப்போது வந்தாலும் ஜாதிப் பெயரை பற்றி பேசுகிறீர்களே என்று கேட்டேன். அவர் மீண்டும் சாதி பெயர் சொல்லி அவதூறாக பேசினார். உடனே சக ஊழியர்கள் அவரிடம் ஏன் இப்படி பேசுகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினர். அதற்கு வழக்கறிஞர் பிரம்மா அனைவரையும் சாதிப்பெயரை சொல்லி திட்டி அவரது வலது கையால் எனது இடது கன்னத்தில் குத்தினார். எங்கள் கடை ஊழியர் பூபதியை பிரம்மாவின் உதவியாளர் மகராஜன் என்பவர் தாக்கினார். அதைத் தடுக்க முனைந்த எங்கள் முதலாளி ஹரிஹரன் வலது கை கட்டை விரலில் காயம் ஏற்பட்டது.
எனவே ஜாதி பெயரை சொல்லி எங்களை தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த புகாரை விசாரணை செய்த பாளையங்கோட்டை காவல் ஆய்வாளர் சோமசுந்தரம் வழக்கறிஞர் பிரம்மா மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 294பி, 352 உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளார். ஏற்கனவே வழக்கறிஞர் பிரம்மா தாக்கப்பட்டதை கண்டித்து நெல்லை மாவட்ட வழக்கறிஞர்கள் ஹோட்டலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்கறிஞர்கள் ஆலோசனையை நடத்தி வரும் நிலையில், வழக்கறிஞர் பிரம்மா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் நெல்லை மாவட்ட வழக்கறிஞர்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர்.
இதையும் படிங்க: 'முதுகெலும்பு இருந்தால் ஆளுநருக்கு கெடு விதித்து இடஒதுக்கீடுக்கு ஒப்புதல் பெறுங்கள்' - பொன்முடி சவால்