திருநெல்வேலி: திருப்பூரைச் சேர்ந்தவர் தேவி. இவர் திருநெல்வேலியின் முக்கூடல் அருகே உள்ள மையிலப்புரம் மேட்டு தெருவில் வசித்து வந்துள்ளார். இதே பகுதியை சேர்ந்தவர்கள் வியாகம்மாள் மேரி, மார்க்ரெட் தீபா.
தேவி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தனது மகள் தர்ஷனாவை (2), ஜான் எட்வர்ட் - அற்புதம் தம்பதியிடம் ரூ. 30 ஆயிரத்துக்கு விற்பனை செய்துள்ளார். குழந்தைகளின் விற்பனைக்கு வியாகம்மாள் மேரி, மார்க்ரெட் தீபா ஆகிய இருவரும் உதவியுள்ளனர்.
கருவிலேயே பேரம் பேசிய கும்பல்
பின்னர் மீண்டும் தேவி கருவுற்றிருந்ததை அறிந்த இந்த கும்பல், குழந்தை வயிற்றில் இருக்கும்போதே விற்பனைக்கு பேரம் பேசியுள்ளது. அப்போது ரூ. 1.50 லட்சம் பணம் கொடுத்து குழந்தையைப் பெற்றுக் கொள்வதாக தென்காசியைச் சேர்ந்த அமலா பாத்திமா தெரிவித்துள்ளார்.
அதன்படி குழந்தை பிறந்த இரண்டு மாதங்களுக்குப் பின்னர் பேசிய தொகையை கொடுத்து, அமலா பாத்திமா குழந்தையை பெற்றுச் சென்றிருக்கிறார்.
இந்நிலையிலேயே குழந்தை விற்பனையில் பெறப்பட்ட பணத்தை பிரிப்பது தொடர்பாக குழந்தைகளின் தாய் தேவி, வியாகமால், மார்க்ரெட் தீபா ஆகிய மூவருக்குமிடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது.
குழந்தைகள் மீட்பு!
விற்பனை விவகாரம் கசியவே, இது தொடர்பாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரமேஷூக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரமேஷ், முக்கூடல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டது உறுதியானது.
இதனையடுத்து இரு குழந்தைகளையும் மீட்ட காவல்துறையினர், குழந்தைகளை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்திற்கு கொண்டு சென்றனர். தற்போது இதுகுறித்து முக்கூடல் காவல் நிலையத்தினர் வழக்குப்பதிவு செய்து, தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ரூ.3 லட்சம் கேட்டு மிரட்டல், பீர் பாட்டில் உடைப்பு- மைசூருவில் காதலன் முன்னே காதலி கூட்டு பாலியல் வன்புணர்வு!