நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்திற்காக நெல்லை வந்த திமுக எம்.பி கனிமொழி நெல்லை மாவட்டம் களக்காட்டில் உள்ள காந்தி சிலை, அண்ணா சிலை மற்றும் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து களக்காடு நாங்குநேரி சாலையில் அமைக்கப்பட்டுள்ள மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார்.
அப்போது பேசிய அவர், ‘நாங்குநேரி இடைத்தேர்தலுக்காக படையெடுத்து வரும் அமைச்சர்கள், மக்களின் பிரச்னைகளை தீர்க்க ஒரு அமைச்சரும் வந்தது கிடையாது. தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் இருந்து வருகிறது. தேர்தலுக்கு தேர்தல் பணம் கொடுத்து வாக்கு வாங்கிவிடலாம் என்று மக்களை கொச்சைப்படுத்தி வருகின்றனர்’ என்று குற்றஞ்சாட்டினார்.
தொடர்ந்து பேசுகையில், ‘மக்களுக்கு பாதுகாப்பிலாத நிலையில் உள்ள ஆட்சி நடந்து வருகிறது. ஹிந்தி தெரிந்தால் தான் அரசு வேலை என்ற நிலையை தமிழ்நாட்டில் மத்திய அரசு உருவாக்கி வருகிறது. இதற்கு தமிழ்நாடு அரசு எதிர்த்து கேள்வி கேட்க தயாராக இல்லை. மக்களுக்கு எதிரான பிரச்னைகளுக்கு மத்திய அரசை எதிர்க்கும் ஒரே இயக்கம் திமுகவும் காங்கிரஸ் கட்சியும்தான்’ என்று தெரிவித்தார்.
மேலும், நீட் தேர்வால் பல மாணவர்கள் உயிரிழந்த நிலை மாறி இன்று நீட் என்றால் ஆள்மாறாட்டம் என்ற நிலை உருவாகியுள்ளது. நீட் என்றால் மோசடி என உருவாகிவிட்டது என்றார்.
இதையும் படிங்க: ‘பணத்தை நம்பும் அதிமுகவிற்கு தோல்விதான் கிடைக்கும்’ - கனிமொழி