திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியின் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த காங்கிரஸை சேர்ந்த எச். வதந்தகுமார் 2019 மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்று எம்பியாக தேர்வானார். இதனால் தனது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை அவர் ராஜினாமா செய்ய, அத்தொகுதி காலியானது.
இதேபோல விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த கே. ராதாமணி (திமுக) மரணமடைந்ததால், அந்தத் தொகுதியும் காலியானது. இதையடுத்து இந்தத் தொகுதிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது.
விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பில் புகழேந்தி, அதிமுக சார்பில் முத்தமிழ்செல்வன், நாம் தமிழர் சார்பில் .கந்தசாமி ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாகக் களத்தில் உள்ளனர். இவர்களுடன் ஒன்பது சுயட்சை வேட்பாளர்களும் களமிறங்குகின்றனர்.
அதேபோல நாங்குநேரி தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் ரூபி மனோகரன், அதிமுக சார்பில் நாராயணன், நாம் தமிழர் சார்பில் ராஜநாராயணன் ஆகியோர் களத்தில் உள்ளனர். இவர்களுடன் 19 சுயட்சை வேட்பாளர்களும் களமிறங்குகின்றனர்.
இதனிடையே இவ்விரு தொகுதிகளின் வாக்குப்பதிவு இன்று தொடங்கி மிகவும் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த இடைத்தேர்தலின் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வரும் அக்டோபர் 24ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளன.