கரோனா வைரஸ் பரவல் காரணமாக 4ஆம் கட்ட தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு சில தளர்வுகளுடன் நடைமுறையில் உள்ளது. இருப்பினும் மாவட்ட எல்லைகளை கடக்க இ-பாஸ் அனுமதி பெற வேண்டும் என்ற நடைமுறை அமலில் உள்ளது. மேலும், பொது போக்குவரத்து செயல்பாடுகள் முடக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக, தமிழ்நாட்டில் கூலித் தொழிலில் ஈடுபட்டுள்ள உத்திரப் பிரதேசம், பிகார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்து வந்த நிலையில், மத்திய - மாநில அரசுகளின் நடவடிக்கைகள் மூலம் படிப்படியாக சொந்த ஊர்களுக்கு சிறப்பு ரயில் மூலம் அனுப்பிவைக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டம் சிந்துபூந்துறை அருகே தாமிரபரணி ஆற்றங்கரை பகுதியில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 25க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடில் அமைத்து வசித்து வருகின்றன. இவர்கள், திருநெல்வேலி மாநகர பகுதிகளில் கட்டட பணிகளில் ஈடுபட்டு வந்தனர். மேலும், கரோனா ஊரடங்கு காரணமாக இரண்டு மாதங்களாக வேலை இல்லாமலும், தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமலும் தவித்து வருகின்றனர்.
இதனிடையே மாவட்ட நிர்வாகம் சார்பில் அரிசி, மளிகை பொருட்கள் கிடைத்தாலும், சில பெற்றோர்கள் குழந்தைகளை பிரிந்து தவித்து வருகின்றனர். வட மாநில தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க முயற்சி எடுக்கும் மாவட்ட நிர்வாகம், தங்களையும் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: தென்னை மரங்கள் பாதுகாப்பது குறித்து வேளாண்மைத் துறை சார்பில் பயிற்சி!