திருநெல்வேலி: பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) மாநில தலைவர் அண்ணாமலை 2024 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு இந்திய மக்களை ஒன்றிணைக்கும் விதமாக 'என் மண் என் மக்கள்' (En Mann En Makkal Padayatra) என்ற பாதயாத்திரையை கடந்த ஜூலை மாதம் 28 ஆம் தேதி ராமேஸ்வரத்தில் துவங்கினார். அதை மத்திய அமைச்சர் அமித்ஷா துவக்கி வைத்தார். தற்போது தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் அண்ணாமலை யாத்திரை மேற்கொண்டு வருகிறார்.
மேலும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நெல்லை மாவட்டத்தில் யாத்திரையை மேற்கொண்டார். அதில் நேற்று காலை பாளையங்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சி முடித்த பின்னர் இரவு கல்லிடைக்குறிச்சியில் நடைப்பெற்ற யாத்திரையில் கலந்து கொண்டார். கல்லிடைக்குறிச்சியில் யாத்திரை செல்லும் வழியில் தொண்டர்கள் அப்பளத்தினாலான மாலை அணிவித்தனர்.
அதைத் தொடர்ந்து, அசாம் ஆட்டினை கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த தொண்டர் ஒருவர் பரிசாக வழங்கினார். அந்த ஆடு சினையாக உள்ளது என கூறியதால், திரும்பி செல்லும் போது வாங்கி கொள்வதாக கூறிவிட்டு யாத்திரையை தொடர்ந்தார் அண்ணாமலை. தொடர்ந்து, தாமிரபரணி ஆறு மாசு அடைவதாக கூறிய நிலையில், கல்லிடைக்குறிச்சி தாமிரபரணி ஆற்றையும் அண்ணாமலை பார்வையிட்டார்.
பின் அம்பாசமுத்திரத்தில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். கல்லிடைக்குறிச்சி என்றாலே அப்பளம் பெயர் பெற்றது. இதில் 3 தலைமுறை கண்ட வராஹா அப்பளம் தயாரிக்கும் நிறுவனத்தின் புதிய கட்டிடத்தை அண்ணாமலை திறந்து வைத்தார். மேலும் அங்கு பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் உணவு பண்டங்களை தயாரிக்கும் முறைகளையும் கேட்டுக்கொண்ட அவர், அங்கு காட்சிப்படுத்தி வைக்கப்பட்ட உணவு பண்டங்களை சுவைத்து பார்த்து மிகவும் ருசியாக உள்ளது என தெரிவித்தார்.
தாமிரபரணி தண்ணீரில் இதனை தயாரிப்பதால் மேலும் சுவையாக உள்ளது எனவும் தெரிவித்தார். மேலும் அண்ணாமலைக்கு ஆடுகள் மீது அதிக ஆர்வம் உண்டு, அவர் தனது சொந்த ஊரில் ஆடுகள் வளர்த்து வருவதாக பல பேட்டிகளில் தெரிவித்துள்ளார். அதாவது ஆடுகள் வளர்ப்பு மூலம் கிடைத்த வருமானத்தை வைத்து தான் தன்னை பெற்றோர்கள் படிக்க வைத்ததாக எப்போதும் பெருமையாக பேசுவார்.
இதையும் படிங்க: மான் வேட்டையாடிய 2 நபர் கைது... வனத்துறையினர் அதிரடி நடவடிக்கை!