திருநெல்வேலி: பாஜக சட்டமன்றக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று(ஜூன் 22) திருநெல்வேலியில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "நாடு நல்லாயிருக்க வேண்டுமெனில், வீடு நல்லாயிருக்க வேண்டும் என்ற புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் பாடலைப் போல பிரதமர், வீடு கட்டும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். ஆனால், தமிழக முதலமைச்சர் மத்திய அரசு ஒன்றும் செய்யவில்லை எனச் சொல்லி வருகிறார்.
இலவச வீடு கட்டும் திட்டம், சாலையோர வியாபாரிகளுக்கான கடன் திட்டம், மகளிருக்கான வேலை வாய்ப்பு திட்டம், 59 லட்சம் கழிவறை உள்ளிட்டப் பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அமலாக்கதுறை தனி நிர்வாகம். பழி வாங்கும் நோக்கில் அமலாக்கத்துறையை மத்திய அரசு பயன்படுத்தவில்லை. தமிழக அரசு முதலமைச்சர் பற்றி சமூக வலைதளங்களில் பதிவு செய்தால், அதனை ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில்தான் தமிழக அரசு உள்ளது. அதனால், பாஜக நிர்வாகிகளை கைது செய்கின்றனர்.
தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகளை அடைப்போம் என திமுக தேர்தல் அறிக்கையில் சொன்னார்கள். தற்போது அடைக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. நடிகர் விஜய் அடுத்த முதலமைச்சர் என அவரது ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர். ஆசைப்படுவது தவறில்லை. விஜய் உள்ளிட்ட யார் வந்தாலும், கூட்டணிக்கு அழைப்போம்.
பாஜக எந்த மதத்தையும் விமர்சனம் செய்வதில்லை. பாஜக மதவாத கட்சி அல்ல. நடிகர்கள் அரசியலுக்கு வருவது சாபக்கேடு எனச் சொல்வது தவறு. அரசியலுக்கு வருவது அவர்களுடைய விருப்பம். நடிகர்கள் மட்டுமல்ல, கரகாட்டம் ஆடுபவர்கள் உள்ளிட்ட எந்த துறையில் இருப்பவரும் அரசியலுக்கு வரலாம். அவர்கள் அரசியல் இருக்கையில் அமர்ந்த பின்னர் அவர்களது திறமை வெளிப்படும்.
நெல்லையில் பருவமழை பெய்யவில்லை. தவறிவிட்டது. பருவமழை காலம் மாறிவிட்டது. குளங்களில் தண்ணீர் இல்லை. தாமிரபரணியில் கழிவுநீர் கலப்பது, நெல்லை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிப்பது உள்ளிட்டவைகளுக்காக பாஜக சார்பில் முதலமைச்சரை சந்திக்க உள்ளோம்.
ராஜ்பவன் ஆர்.எஸ்.எஸ் கூடாரமாக மாறுவதாக சொல்வது முற்றிலும் தவறு. சில சட்டதிட்டங்களில் மாநில அரசுக்கும் ஆளுநருக்கும் சில முரண்பாடுகள் இருக்கின்றன. வேந்தர் அதிகாரம் ஆளுநருக்கு வேண்டும் என கருணாநிதி கூறினார். தற்போது வேண்டாம் என்கின்றனர். இந்தப் பிரச்சனை நீண்ட காலமாக நீடித்து வருகிறது" என்று கூறினார்.