நெல்லை: தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி அரசியல் கட்சியினர் தேர்தல் பணியில் பரபரப்பாக ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் நாகர்கோவில் தொகுதி பாஜக எம்எல்ஏ எம்.ஆர்.காந்தி இன்று நெல்லை வந்தபோது அவரது காரில் இருந்த கட்சிக் கொடியை அகற்றும்படி காவல்துறையினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
எம்எல்ஏ எம்.ஆர். காந்தி தூத்துக்குடியில் இருந்து நெல்லை நோக்கி வந்துள்ளார், நெல்லை கேடிசி நகர் சர்வீஸ் சாலை வழியாக வந்தபோது அங்கு அமைக்கப்பட்டிருந்த சோதனைச்சாவடியில் தேர்தல் பறக்கும்படையினர் எம்.ஆர்.காந்தியின் காரை வழிமறித்து தற்போது தேர்தல் விதிமுறை அமலில் இருப்பதால் காரில் இருந்த பாஜக கட்சிக் கொடியை அகற்றும்படி கூறியுள்ளனர்.
அதேசமயம் அப்பகுதியில் திமுக முக்கிய நிர்வாகி ஒருவரின் இல்லத் திருமணம் நடைபெறுவதையொட்டி கேடிசி நகர் முழுவதும் சாலையோரம் வழிநெடுக திமுக கொடி கட்டி வைத்துள்ளனர். கண் முன்னே ஆளுங்கட்சி கொடி பறக்கும்போது எம்எல்ஏ காரில் உள்ள கொடியை அகற்ற சொன்னதால் ஆத்திரமடைந்து எம்எல்ஏவுடன் வந்திருந்த பாஜகவினர், காவல்துறையினர் மற்றும் அலுவலர்களுடன் கடும் வாக்குவாதம் செய்தனர்.
ஆளுங்கட்சிக்கு மட்டும் கரிசனமா..?
நடுரோட்டில் ஆளுங்கட்சி கொடி பறக்கும்போது எம்எல்ஏ காரில் உள்ள கொடியை மட்டும் அகற்ற சொல்வது ஏன்..? எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளிக்க முடியாமல் காவல்துறையினர் திணறினர். ஒருகட்டத்தில் ஆளுங்கட்சிக்கு மட்டும் கரிசனை காட்டி விட்டு எதிர்கட்சியினரிடம் கிடுக்குப்பிடி காட்டுவதை நன்கு உணர்ந்த பறக்கும்படையினர் வேறு வழியில்லாமல் எம்எல்ஏ காந்தி காரில் இருந்த கொடியை அகற்றாமல் அவரை அங்கிருந்து அனுப்பிவைத்தனர்.
மேலும், தேர்தல் அலுவலர்களின் உத்தரவையடுத்து சாலையில் வைக்கப்பட்டிருந்த திமுக கொடிகளை அக்கட்சியினர் எடுத்து விட்டனர், இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
இதையும் படிங்க:'நீட் விலக்கு சட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது ஏற்கத்தக்கது அல்ல!'