திருநெல்வேலி: தென்காசி, வேலூர் உள்பட விடுபட்ட 10 மாவட்டங்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் வரும் செப்டம்பர் மாதம் நடத்த தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதுதொடர்பாக மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் பல்வேறு கட்ட ஆலோசனைகளை நடத்தி வருகிறார்.
மாநில தேர்தல் ஆணையர் ஆலோசனை
அந்த வகையில் இன்று (ஆக.17) திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்பு
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தேர்தல் ஆணைய செயலாளர் சுந்தரவல்லி, முதன்மை தேர்தல் அலுவலர்கள், மண்டல தேர்தல் அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர்கள் விஷ்ணு, கோபால சுந்தரராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.
வாக்குச்சாவடிகள் அமைப்பது குறித்து ஆலோசனை
இந்தக் கூட்டத்தின்போது திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான முன்னேற்பாடுகள், வாக்குச்சாவடிகள் அமைப்பது, வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்வது, வாக்காளர் பட்டியல் சரி பார்ப்பது போன்ற விஷயங்கள் குறித்து அலுவலர்களுடன் தேர்தல் ஆணையர் ஆலோசித்தார்.
குறிப்பாக திருநெல்வேலி மாவட்டத்தில் 12 மாவட்ட கவுன்சிலர்கள் 122 யூனியன் கவுன்சிலர்கள் 204 கிராம பஞ்சாயத்து தலைவர்கள் 1,731 வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 2,069 பதவிகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது.
அதேபோன்று தென்காசி மாவட்டத்தில் 14 மாவட்ட கவுன்சிலர்கள், 144 யூனியன் கவுன்சிலர்கள், 221 கிராம பஞ்சாயத்து தலைவர்கள், 1,095 வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 2,294 பதவிகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது.
தேர்தல் நடத்த நீதிமன்றம் உத்தரவு
செப்டம்பர் மாதத்திற்குள் தேர்தலை நடத்தி முடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே இன்னும் ஓரிரு வாரங்களில் உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.
இதுபோன்ற சூழ்நிலையில் மாநில தேர்தல் ஆணையர் திருநெல்வேலியில் இன்று ஆலோசனை நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வக்ஃபு வாரியம் சொத்து முறைகேடு வழக்கு: அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு