திருநெல்வேலி: தீபாவளி பண்டிகை என்றாலே மக்கள் அனைவரும் புத்தாடைகள் உடுத்தி, பட்டாசுகள் வெடித்து, வீட்டில் பலகாரங்கள் செய்து, குடும்பத்துடன் உற்சாகமாக கொண்டாடுவார்கள். ஆனால், குடும்பத்தை இழந்த ஆதரவற்ற குழந்தைகளுக்கு புத்தாடை, பட்டாசு, பலகாரம் என்பதெல்லாம் அவர்களில் ஏக்கங்களுல் ஒன்றாகவே இருக்கும்.
இந்நிலையில், நெல்லையைச் சேர்ந்த தனியார் அறக்கட்டளையினர் சார்பில் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களை இழந்த ஆதரவற்ற குழந்தைகளுக்கு, அவர்களுக்கு பிடித்த புத்தாடைகளை அவர்களையே தேர்ந்தெடுக்கச் செய்து வாங்கி கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை அன்னை தெரசா அறக்கட்டளை சார்பில், திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் உள்ள காப்பகத்தில் வசித்து வரும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு தீபாவளியை பண்டிகை முன்னிட்டு புத்தாடைகள் வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு சிறப்பு என்னவென்றால், அக்குழந்தைகள் அனைவரையும் கடைக்கு அழைத்துச் சென்று, அவர்கள் தேர்ந்தெடுக்கும் ஆடைகளை வாங்கித்தர அறக்கட்டளை நிர்வாகிகள் முடிவு செய்தனர்.
அதனை அடுத்து, நெல்லை வண்ணாரப்பேட்டையில் உள்ள பிரபல ஜவுளிக்கடைக்கு, அக்குழந்தைகளை அழைத்து சென்று, அங்கு அவர்களுக்கு பிடித்த புத்தாடைகளை அவர்களே தேர்வு செய்து எடுத்து கொள்ளும்படி கூறியுள்ளனர். அதன் பின்னர், குழந்தைகள் மகிழ்ச்சியோடு தங்களுக்குப் பிடித்த ஆடைகளை வாங்கிக் கொண்டனர்.
வழக்கமாக இதுபோன்ற, ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவுபவர்கள், அவர்களே புத்தாடைகளை வாங்கி குழந்தைகளிடம் கொடுப்பார்கள். ஆனால், அன்னை தெரசா அறக்கட்டளை நிர்வாகத்தினர் குழந்தைகளை நேரடியாக கடைக்கு அழைத்துச் சென்று அவர்களின் விருப்பப்படியே புத்தாடைகள் வாங்கி கொடுத்த சம்பவம் மக்களை நெகிழ்வடைய செய்துள்ளது.
அதேபோல் ஆதரவற்ற முதியவர்கள், குடும்பத்தினரால் கைவிடப்பட்டவர்கள் என சுமார் 250 பேருக்கு புத்தாடைகள் வாங்கி கொடுத்து மகிழ்வித்துள்ளனர். இதற்காக, அன்னை தெரசா அறக்கட்டளை நிர்வாகம் சுமார் ரூ2.50 லட்சம் செலவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், தொடர்ந்து பத்தாவது ஆண்டாக இதுபோன்று ஏழை எளிய ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு அன்னை தெரசா அறக்கட்டளை நிர்வாகம் தீபாவளிக்கு புத்தாடைகள் வழங்கி வருகிறது. இதுகுறித்து அறக்கட்டளை நிர்வாகி மகேஷ் கூறும் போது, "ஒவ்வொரு ஆண்டும் இது போன்ற ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஆடைகள் வாங்கி கொடுக்கும் போது அவர்களும் மகிழ்ச்சி அடைவது, எங்களுக்கும் ஒருவித திருப்தி ஏற்படுகிறது" என்று கூறினார்.
இதையும் படிங்க: சென்னையில் களைகட்டிய தீபாவளி.. கடைசி நிமிட ஷாப்பிங் புகைப்படங்கள்!