திருநெல்வேலி: அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஒருங்கிணைந்த நெல்லை மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் கிருஷ்ணாபுரத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறியதாக திமுக அரசுக்கு எதிராகவும், நெல்லை மாவட்ட சிப்காட் நிர்வாகம் விவசாயிகளின் நிலங்களை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி தன்னிச்சையாகக் கையகப்படுத்தும் செயலை கண்டித்தும், தாமிரபரணி நதி சாக்கடை கழிவுகளால் அசுத்தமாகி வருகிறது மீண்டும் அதன் புனிதத் தன்மையை மேம்படுத்தத் தமிழக அரசை வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கூட்டத்தில் பேசிய டிடிவி தினகரன், "50 ஆண்டுகளாக இருக்கும் கட்சிகளுடன் போட்டியிட்டு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கடந்த ஆறு ஆண்டுகளில் அனைத்து கிராமங்களிலும் கிளை கழகங்களை உருவாக்கி செயல்பட்டு வருகிறது என புகழாரம் சூட்டினார். தொடர்ந்து பேசிய அவர், தமிழக முழுவதும் விவசாய நிலங்களை அரசு தன்னிச்சையாகக் கையகப்படுத்தி வருகிறது அரசின் இத்தகைய நடவடிக்கையைக் கண்டு நீதிபதியும் கண்கலங்கிப் பேசியுள்ளார் என்றும் நெய்வேலியில் விவசாயிகளுக்கு ஆதரவாகப் போராட்டம் நடத்திய பாமக தலைவர் அன்புமணியை போலீசாரை வைத்து தமிழக அரசு கைது செய்துள்ளது ஸ்டாலின் ஹிட்லரைப் போல் மாறிவிட்டார் என்று கடுமையாக விமர்சனம் செய்தார்.
மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு பழனிசாமி என்ற நபர் என்ன ஆக போகிறார் என்று பொறுத்திருந்து பாருங்கள் என்று கூறினார். கோடநாடு பங்களாவில் பணி செய்தவர்கள் மர்ம மரணம், வீடு புகுந்து கொள்ளையடித்த நபர்கள் குடும்பம் மர்ம மரணம் போன்றவை திரைப்பட பாணியை போல் நடந்து வருகிறது. ஆகஸ்ட் 1ம் தேதி ஓபிஎஸ் உடன் இணைந்து கோடநாடு வழக்கு கொலை, கொள்ளை சம்பவத்தில் தொடர்பிலிருந்தவர்களையும் பின்னணியிலிருந்தவர்களையும் கைது செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
மு.க.ஸ்டாலின் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை முதலமைச்சரான பின்னர் விடியல் ஆட்சி தருவோம் எனச் சொல்லிவிட்டு விடியா மூஞ்சி ஆட்சி நடத்தி வருகிறார். எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் 15 சதவீதம் கமிஷன் இருந்தது திமுக ஆட்சியில் கமிஷன் தொகை 25 ஆக மாறிவிட்டது. எம்ஜிஆர் ஜெயலலிதா சின்னத்தை வைத்துக்கொண்டு தொண்டர்களை ஏமாற்றி வரும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் நெல்லிக்காய் மூட்டை போல் சிதறிவிடும் என்று விமர்சித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், நாடாளுமன்றத் தேர்தலில் அமமுக வெற்றி கணக்கை தொடங்க அனைவரும் பணியை மேற்கொள்ள வேண்டும் யார் வரக்கூடாது யார் வெற்றி பெறக் கூடாது என்பது நமக்கு நன்றாக தெரியும் அம்மாவின்(ஜெயலலிதா) பெயரும் கட்சியும் சின்னமும் போலிகளின் கையில் சிக்கிக் கொண்டிருக்கிறது அதனை மீட்டெடுக்க வேண்டும் தனித்துப் போட்டியிடுவதற்கும் நாம் தயார் நிலையில் இருக்கிறோம். நாடாளுமன்றத் தேர்தலில் யார் வெற்றி பெற வேண்டும் என்பதை ஓபிஎஸும், அமமுகவும் தான் தீர்மானிக்கும் சக்தியாக இருப்பார்கள்" என அவர் பேசினார்.
இதையும் படிங்க: பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு